எதிர்கால தேவைகளை ஆராய்ந்த மின்னிலக்க தினம்

எதிர்கால தேவைகளை ஆராய்ந்த மின்னிலக்க தினம்

2 mins read
439efa7f-38ce-4170-b093-4b37bff23766
சிண்டா ஏற்பாடு செய்திருந்த மின்னிலக்க தினத்தின் ஓர் அங்கமாக நடத்தப்பட்ட கணினி நிரலாக்கப் போட்டியில் மேல்நிலை வகுப்புகளைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அறிவார்ந்த தேசமாக உருவாகும் முயற்சியில் நம் பிள்ளைகளை எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு இப்போதே தயார்ப்படுத்த வேண்டும். அதற்காக கணினி நிரலாக்கம் (coding) போன்ற வேலையிடத் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கு அடித்தளத்தை இடும் நோக்கில் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று 'டிஜிட்டல் தினம்' என்னும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

வாழ்நாள் கற்றல் கழகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்காக கணினி நிரலாக்கப் போட்டி ஒன்று நடைபெற்றது. மற்றொரு அங்கத்தில் பாலர் பள்ளி மாணவர்களுக்கென இயந்திரவியல் தொடர்பான சில தகவல்களுடன் அடிப்படைக் கணினி பயன்பாடு குறித்த பயிலரங்கும் இடம்பெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெற்றோரையும் பிள்ளையின் கற்றல் பயணத்தில் ஈடுபடுத்த சிண்டா முனைந்தது. மின்னிலக்க உலகில் உலாவும் சிறார்கள் பொறுப்பாக இணையத்தைப் பயன்படுத்துவதைக் குறித்த கலந்துரையாடலில் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

தொழில்நுட்பம் பிள்ளைகளிடையே ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள், தொழில்நுட்பத்தைப் பொறுப்பாகப் பயன்படுத்த பிள்ளைகளுக்கு வழிகாட்டுதல் போன்றவை இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டன.

''பிள்ளைகள் நேரக்கட்டுப்பாட்டுடன் கணினியைப் பயன்படுத்துவது பற்றி அறிந்துகொண்டேன். இணையத்தில் என்ன செய்கிறார்கள், இணையத்தை முறையாகப் பயன்படுத்துகிறார்களா என்பதைக் கண்காணிக்க வேண்டும்,'' என்றார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திருமதி கமலா தேவி.

"கல்வித் துறையில் பல மாற்றங்கள் வந்து உள்ளன. பெற்றோர்களும் இம்மாற்றங்களைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். இந்த நிகழ்ச்சி இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வகைசெய்தது,'' என்று தெரிவித்தார் சிண்டாவின் தலைமை செயலாக்க அதிகாரி திரு ரவீந்திரன் நாகலிங்கம்.

சிறுவர், பெற்றோர் என மொத்தம் 160க்கும் மேற்பட்டோர் மின்னிலக்க தின நடவடிக்கைகளில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.