நேரில் சென்று மக்களிடம் நலம் விசாரித்த சிங்கப்பூர் அமைப்புகள்

நேரில் சென்று மக்களிடம் நலம் விசாரித்த சிங்கப்பூர் அமைப்புகள்

2 mins read
8fe73796-3617-4d5d-a9f7-6c697aff4798
அவசரகால தயார்நிலை திட்டங்கள் குறித்து கடலூர் மக்களிடம் எடுத்துரைக்க உதவும் சுய உதவிக் குழுக்களின் பெண் உறுப்பினர்களைச் சந்தித்த ரஹ்மத்தன் லில் ஆலமின் பிரதிநிதிகள். படம்: ரஹ்மத்தன் லில் ஆலமின் அறநிறுவனம் -

தமிழகத்தின் கடலூர் மாவட்டம் 2017ஆம் ஆண்டில் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. வெள்ளப் பாதிப்பால் அவதிக்குள்ளான அப்பகுதி மக்களுக்கு சிங்கப்பூரின் 'ரஹ்மத்தன் லில் ஆலமின்' அறநிறுவனம் அப்போது மனிதநேய அடிப்படையில் உதவிக்கரம் நீட்டியது.

சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தால் (முயிஸ்) அமைக்கப்பட்ட ரஹ்மத்தன் லில் ஆலமின், சிங்கப்பூரின் மனிதநேய உதவி அமைப்பான 'மெர்சி ரிலிஃப்'வுடன் இணைந்து நிதி திரட்டி அம்மக்களுக்கு உதவிக்கரம் நீட்டியது.

திரட்டப்பட்ட நிதியில் 15 விழுக்காடு தொகை உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக விநியோகிக்கப்பட்டது.

எஞ்சிய நிதி, அவ்வட்டார மக்களின் இயல்பு வாழ்க்கையை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டது.

தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் ஒவ்வோர் ஆண்டும் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகும் நிலையில், வெள்ள நிவாரண நடவடிக்கைகள் குறித்து அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, தமிழகத்தைச் சேர்ந்த அரசாங்க சார்பற்ற அமைப்பான 'கல்வி கேந்திரா'வுடன் இணைந்து 'மெர்சி ரிலிஃப்' பணியாற்றியது. உதாரணத்திற்கு, வெள்ளத்திலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ளும் வழிகளைப் பற்றி கடலூர் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இந்த உதவித் திட்டம் செயல்

படுத்தப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆகியுள்ள வேளையில், வெள்ள நிவாரண நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து கடலூர் மக்களிடம் கேட்டறிய இம்மாத தொடக்கத்தில் ரஹ்மத்தன் லில் ஆலமின் உறுப்பினர்கள் அங்கே பயணம் மேற்கொண்டனர். அவர்களில் ரஹ்மத்தன் லில் ஆலமின் அறங்காவலர் குழு உறுப்பினர் நசீர் கனியும் செயல் இயக்குநர் ஸைனுல் அபிடினும் அடங்குவர்.

இந்த அமைப்புகள் முன்னெடுத்துள்ள முயற்சிகள் மூலம் கடலூர் மாவட்டத்தின் 19 கிராமங்களில் 6,000க்கும் மேற்பட்டோர் பயனடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.