பரபரப்பான வேலை வாழ்க்கைச் சூழல், தொழில்நுட்ப அம்சங்களுடன் அதிக நேரம் செலவிடும் போக்கு.
இதுவே நம்முடைய நடைமுறை வாழ்க்கையாகிவிட்டது.
இத்தகைய சூழலில் பிள்ளைகளுடன் நெருக்கமாக செயல்பட்டு குடும்ப
பந்தத்தை வலுப்படுத்தும் பொறுப்பு பெற்றோர்களுக்கு உள்ளது.
மனரீதியாக அவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற
நம்பிக்கை முதலில் பிள்ளைகளுக்கு வருவது முக்கியம்.
அவர்களின் வளர்ச்சிக்கு இணங்க, பெற்றோர் தமது பிள்ளைகளுடன் அர்த்தமுள்ள நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். குடும்ப உறவுகள் வலுவாகி, பிள்ளைகளின் வளர்ச்சியில் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பது சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
'ஹலோ பேபி' பரிசுத் திட்டம்
அதன் தொடர்பாக கடந்தாண்டு, சிண்டா 'ஹலோ பேபி' பரிசுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
பிள்ளை பிறந்தவுடன் பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையிலான பந்தத்தை வளர்க்க, விளையாட்டுப் பொருட்கள், புத்தகங்கள் உள்ளடக்கிய பரிசுகளைப் பெற்றோர் இலவசமாகப் பதிவுசெய்து, பெறலாம்.
சிண்டாவின் இணையப்பக்கத்தில் இத்திட்டத்தைப் பற்றி அறிந்து, பதிவு செய்து, இலவச பரிசுப் பொருட்களைப் பெற்றுக்கொண்டார் 32 வயது பெற்றோர் திருமதி நா. புவனேஸ்வரி.
பாலர் பள்ளி ஆசிரியரான இவர், பரிசுப் பொருட்கள் அனைத்தும் தமக்கு இவ்வாண்டு பிறந்த இரண்டாவது மகள் அஹானாவுக்குப் பொருத்தமானவை என்றார்.
உதாரணத்திற்கு, மெத்தையில் படுத்தவாறு கைக்கு எட்டும் தூரத்தில் பொருத்தப்பட்டுள்ள விளையாட்டுப் பொருட்கள், பார்வையுடன் கூடிய பொருளைக் கையாளும் திறனை மேம்படச் செய்கிறது என்று அவர் விளக்கிறார்.
வண்ணப் பந்துகள், அடிப்படை எழுத்துகளை அறிமுகம் செய்யும் புத்தகங்கள், அடுக்கடுக்காக வைக்கும் 'கார்ட்டூன் சித்திரங்களை'க் கொண்ட கட்டுகளின் பயன்பாட்டில் பிள்ளையின் முக்கியத் திறன் வளர்ச்சிக்கு வழிவகுக்கின்றது.
குறிப்பாக இம்மாதம் எட்டு மாதங்கள் பூர்த்தியாகும் மகள் அஹானாவின் உடல் அசைவுகளில் நல்ல மாற்றம் தென்படுகின்றது எனச் சொன்னார் திருமதி
புவனேஸ்வரி.
இத்திட்டத்தின் மூலம் பலன் அடைந்த இவர், சமீபத்தில் தம் புதிய வரவை வரவேற்ற தம் தம்பி குடும்பத்திற்கும் இது குறித்துப் பரிந்துரைத்தார்.
பெற்றோர்-பிள்ளை
நடவடிக்கைகள்
நீண்ட நேரம் வேலை, மாறு நேர வேலை போன்ற காரணங்களால் பிள்ளைகளுடன் அர்த்தமுள்ள நடவடிக்கைகளில் ஈடுபட பெற்றோருக்குச் சற்று சவாலாக இருக்கலாம்.
அவர்களுக்கிடையே பந்தத்தை வலுவாக்கும் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதில் சிண்டா மும்முரம் காட்டி வருகின்றது. அண்மையில் சிண்டா தனது வளாகத்தில் ஏற்பாடு செய்த 'தந்தையுடன் காலை உணவு' பயிலரங்கிற்கு மரிய ஜஸ்டின் பிலோமிநாதன் தமது ஆறு வயது மகன் ஜெரேமியாவுடன் சென்றிருந்தார்.
பால், வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றைக் கொண்டு பிள்ளைகளின் காலை உணவைத் தயாரிக்க வேண்டும்.
''பிள்ளைகளைச் சிந்திக்க இத்தகைய நடவடிக்கைகள் தூண்டுகின்றன. இதைத் தவிர்த்து, பிள்ளைகளைப் பற்றி எவ்வளவு பெற்றோர்களுக்குத் தெரியும் என்ற புதிர் அங்கமும் பயிலரங்கில் இடம்பெற்றது. ஒருவருக்கொருவர் நன்றாகப் புரிந்துகொள்ள இது வாய்ப்பளித்தது,'' என்று பயிலரங்கில் கலந்துகொண்ட அனுபவத்தை நினைவுகூர்ந்தார் 42 வயது திரு மரிய ஜஸ்டின்.
பொறியாளராக இருக்கும் இவர், வாரநாட்களில் வேலை முடிந்து வீடு திரும்பும்போது தமது ஆறு மற்றும் 13 வயது மகன்களுடன் இரவு உணவும் சிறிது நேரம் ஒளிவழி நிகழ்ச்சியும் பார்ப்பதற்கு மட்டும்தான் நேரம் இருக்கிறது என்றார்.
வார இறுதி நாட்களில்தான், அவர்களை வெளியே அழைத்துச் செல்ல முடிகின்றது என்று குறிப்பிட்ட திரு மரிய ஜஸ்டின், பெற்றோர்களே முயற்சி எடுத்து பிள்ளைகளை வெவ்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி அவர்களுடன் நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னார்.
''பிள்ளைகள் வளரும் பருவம் குறுகிய காலம்தான். வேலைப் பளுவினால் அவர்களுடன் போதிய நேரம் செலவிடாத பட்சத்தில் அவர்கள் வளர்ந்த பிறகு அவர்கள் நினைவில் சேர்ந்து ஈடுபட்ட மகிழ்ச்சியான தருணங்கள் இல்லாமலேயே போய்விடும்,'' என்று விளக்கினார் அவர்.
பெற்றோருக்கான பயிலரங்குகள்
இன்றைய சவாலான சூழலில் பிள்ளையின் நலனிலும் மேம்பாட்டிலும் எப்படி ஆதரவு வழங்கலாம் என்ற அக்கறை பெற்றோருக்கு இருக்கும்.
பிள்ளைகள் தன்னம்பிக்கையை வளர்த்து அவர்கள் சுயமாகச் செயல்பட, சிண்டா தொடர்ந்து பெற்றோர்களுக்காக பயிரலங்குகளையும் ஏற்பாடு செய்கிறது.
அதில் பெற்றோர்கள் பிள்ளை வளர்ப்புக்குத் தேவையான உத்திமுறைகளைத் தேர்ந்த நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்கின்றனர்.
பிள்ளைகளை நன்கு புரிந்துகொள்வதோடு, அவர்கள் வளரும் காலகட்டத்தில் அவர்களுடன் எப்படி இருவழி உரையாடல்களை மேற்கொள்வது போன்ற உத்தி முறைகள் இந்த பயிலரங்குகளில் ஆராயப்படுகின்றன.
தமது நான்கு வயது மகன் வரெஷ் சூரியசெல்வனின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு கடந்த சில மாதங்களில் சிண்டா ஏற்பாடு செய்த இரு பெற்றோர் பயிலரங்குகளில் கலந்துகொண்டார் திருமதி அ. கமலா தேவி.
''கையடக்க கணினி அல்லது திறன்பேசி தொடு திரையை எத்தனை மணி நேரம் பிள்ளைகள் பயன்படுத்தலாம், ஒரு பிள்ளை பிரச்சினையை எதிர்கொண்டால் அதன் மூல காரணத்தை எப்படி பிள்ளையிடம் கேட்டு அறிவது போன்ற பயனுள்ள தகவல்களை இவற்றின் வழி கற்றுக்கொண்டேன்,'' என்று கூறினார் 45 வயது பெற்றோர் கமலா தேவி.
''இந்திய குடும்பங்கள் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பது, சிண்டா கவனம் செலுத்தி வரும் முக்கியக் கூறுகளில் ஒன்றாகும். வலுவான பிணைப்பைக் கொண்ட குடும்பங்களை உருவாக்க கடப்பாடு கொண்டுள்ளோம். இவ்வாறு செய்யும்போது பிள்ளைகளின் வளர்ச்சிக்கு ஏதுவாக ஒரு வலுவான சூழல் உருவாகின்றது,'' என்று கூறினார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி
திரு அன்பரசு இராஜேந்திரன்.
மேலும் விவரங்களுக்கு சிண்டாவின் http://www.sinda.org.sg/services/family/ இணையத்தளத்தை நாடலாம்.

