‘கறுப்பு நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு

சுபாஷினி கலைக்கண்ணனின் இரண்டாவது கவிதை நூலான, ‘கறுப்பு நட்சத்திரங்கள்’ கடந்த மாதம் 10ம் தேதியன்று வெளியீடு கண்டது. தமிழர் பேரவையின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்திருந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் சுவாரசியமான உரைகள், இளையரின் கவிதை வாசிப்பு என சுவையான அங்கங்கள் இடம்பெற்றன.

“இளையர்களை சிங்கை இலக்கியம் பக்கம் இழுக்கவும் தமிழில் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தகைய மாறுபட்ட முயற்சிகள் உதவும்,” என்றார் பேரவையின் இளையர் பிரிவு தலைவர் அருண் கிருஷ்ணன்.

தேசிய நூலகத்தில் நடைபெற்ற வெளியீட்டு நிக‌ழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு இர்ஷத். 

“இளைஞர்களைச் சென்றடையும் வண்ணம் எழுதப்பட்டுள்ள சுபாஷினியின் கவிதைகள், படிக்க எளிதாகவும் இருக்கின்றன. டுவிட்டர், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு, சுபாஷினியின் ‘கறுப்பு நட்சத்திரங்கள்’ ஏற்றதாக விளங்கும் என்பதில் ஐயமில்லை,” என்று அவர் கூறினார்.

தொலைக்காட்சி பிரபலங்களான திரு வடிவழகன், திரு முகம்மது அலி, எழுத்தாளர் திருமதி பிரேமா மகாலிங்கம், தமிழர் பேரவையின் இளையர் பிரிவு தலைவர் திரு அருண் கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சுபாஷினியின் ‘கறுப்பு நட்சத்திரங்கள்’ சென்ற 8ம் தேதியன்று சென்னையில் வெளியீடு கண்டது.