‘மரபு’ கலைப் படைப்பு

கடாரத்தில் (தற்கால ‘கெடா’ மாநிலம்) விஜய நகரப் பேரரசு கொடி கட்டிப் பறந்தபோது, நடந்த வரலாற்று நிகழ்வுகளைப் புதுமையான முறையில் சுவை சொட்ட எடுத்தியம்பியது ‘மரபு’ கலைப் படைப்பு. 

பரதநாட்டியம், கர்நாடக மற்றும் கமிலான் இசை, நாடகம் ஆகியவற்றின் சங்கமம் இப்படைப்பில் ஒருசேர அமைந்தது.

கலாசார விருது பெற்ற சாந்தா பாஸ்கர் தம் இணை நடன இயக்குநரான அஜித் பாஸ்கர், நாடக இயக்குநரான ஜி.செல்வா ஆகியோருடன் இணைந்து இப்படைப்பினை வழங்கினார்.

மூன்று பாகங்களில் முதலாம் அத்தியாயமாக அரங்கேறிய ‘மரபு - த ஃபர்ஸ்ட் ரிப்பல்’, எஸ்பிளனேட்டின் ஆதரவுடன் சென்ற மாதம் 15 முதல் 17ஆம் தேதிவரை நடைபெற்றது. 

இதில் வரும் முதன்மை கதாபாத்திரம், ஒரு விவசாயி. சோழர்களின் படையெடுப்பில் தொடங்கி புஜங்கா பள்ளத்தாக்கு கோயில்கள் கட்டப்பட்டது வரையிலான அந்தக் கதாபாத்திரத்தின் பயணம், கலைப் படைப்பில் சுவைப்பட சித்திரிக்கப்பட்டது.

“நம் கலாசார, வரலாற்றின் தொடக்கத்தை அறிந்திருப்பதன் முக்கியத்துவத்தை ‘மரபு’ என்ற கலைப் படைப்பு வெளிப்படுத்துகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் மக்கள் பின்பற்றும் வாழ்க்கைமுறைக்குக் காரணமான சம்பவங்களையும் முக்கியமான மனிதர்களையும் இத்தயாரிப்பு காட்சிப்படுத்தியுள்ளது.

“பாடகர்கள், நடனமணிகள், நடிகர்கள் என எங்களின் கலைஞர்க் கூட்டத்தில் சிறியவர் முதல் முதியவர் வரை பலர் இம்மாபெரும் கலைப் படைப்புக்காக ஒன்றிணைந்தனர்,” என்றார் ‘மரபு’ கலைப் படைப்பின் நாடக இயக்குநர் திரு ஜி.செல்வா.

இப்பிரம்மாண்ட கலைப் படைப்புக்காக ‘பாஸ்கர்ஸ் கலைகள் அகாடமி’, மலேசியாவின் ‘சுவர்ணா நுண்கலைகள்’, ‘அவாண்ட் தியேட்டர்’, ‘கமிலான் சிங்கமூர்த்தி’ ஆகியவற்றைச் சேர்ந்த கலைஞர்களுடன் இந்தியாவின் இசையமைப்பாளரான டாக்டர் ராஜ்குமார் பாரதியும் இணைந்து பணியாற்றினார்.

டாக்டர் ராஜ்குமார், மகாகவி சுப்ரமணிய பாரதியின் கொள்ளுப் பேரன் ஆவார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நீடித்த இப்படைப்பு தமிழில் அரங்கேறியது.  பிற இனத்தவர் எளிதில் புரிந்துகொள்ள ஆங்கில மொழிபெயர்ப்பும் வழங்கப்பட்டது.