சுடச் சுடச் செய்திகள்

உட்லண்ட்ஸ், பொங்கோல் வட்டாரங்களில் பொங்கிய குதூகலம்

பொங்கோல் சமூக மன்றத்தில் கிராமிய பொங்கல் விழா

பொங்கல் விழா ஒவ்வோர் ஆண்டும் பொங்கோல் சமூக மன்றத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சென்ற மாதம் 19ஆம் தேதி வண்ணமிகு கிராமிய பொங்கல் விழா ஹவ்காங் வட்டார பகுதியில் அமைந்திருக்கும் பொங்கோல் சமூக மன்றத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

கிட்டத்தட்ட 400 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிடோக் ரெசர்வோர்-பொங்கோல் அடித்தள அமைப்பின் ஆலோசகர் திரு விக்டர் லாய் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

விழாவில் சிலம்பம், கோலாட்டம், ஒயிலாட்டம், உறியடித்தல், பல்லாங்குழி, நூற்றாங்குச்சி, பம்பரம், இசை நாற்காலி உள்ளிட்ட தமிழரின் மரபு சார்ந்த நடனம் மற்றும் விளையாட்டுகள் இடம்பெற்றன.

இளையர்களுடன் மூத்தோரும் சேர்ந்து ஒவ்வொரு விளையாட்டிலும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றனர்.

விழாவில் தமிழரின் பாரம்பரிய இசையான பறை இசையை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டு நடனத்துடன் படைத்தனர். 

முன்னதாக, பொதுமக்கள் உற்சாகமாகக் கலந்துகொண்டு பொங்கலிட்டனர். பொங்கல் பொங்கி வரும் தருணத்தில் “பொங்கலோ பொங்கல்...பொங்கலோ பொங்கல்,” என்று கூவி மகிழ்ந்தனர். பின்னர் பொங்கிய பொங்கலை கதிரவனுக்குப் படைத்து நன்றி தெரிவித்துக்கொண்டனர். இடையிடையே, பாடகர்கள் பொங்கல் பற்றிய சிறப்பு பாடல்களைப் பாடி மண் மணம் மாறாத பண்டிகை உணர்வை ஊட்டினர்.

விழாவில் ஹவ்காங் பகுதியில் வாழும் இந்தியர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவாக, அனைவரும் பொங்கலுடன் கூடிய இரவு உணவருந்தி மகிழ்ந்தனர்.

உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தில் பாரம்பரியத்தைச் சித்திரித்த பொங்கல் தோரணம், வாழை மரங்கள், கரும்பு, மாவிலைகள் எனப் பாரம்பரிய அலங்காரத்துடன் உட்லண்ட்ஸ் சமூக மன்றம் சென்ற 19ஆம் தேதியன்று பொங்கல் கொண்டாட்டத்தில் களைகட்டியது. 

கிட்டத்தட்ட 400 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்வுக்கு உள்துறை, சுகாதார அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின் சிறப்பு விருந்தினராக வருகை அளித்தார்.

கொண்டாட்டத்தில் பாரம்பரிய முறையில் பொங்கல் வைத்தல், கலாசாரப் படைப்புகள், மலேசிய ‘ரஜினி’யின் ஊர்வலம், உறியடி விளையாட்டு, குழந்தைகளுக்கான பசு கண்காட்சி எனப் பற்பல அங்கங்கள் இடம்பெற்றன. 

உட்லண்ட்ஸ் அடித்தள அமைப்புக்கும் ஆலோசகரான திரு அம்ரின், ஏற்பாடு செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கேற்று மகிழ்ந்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon