கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்கும் முயற்சியாக வெளிநாடுகளுக்குச் சென்று திரும்புவோர் அனைவரும் 14 நாட்கள் வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அத்தகைய ஆணைக்கு உட்பட்ட சிலர், அந்த இரு வார காலத்தைக் கழித்த விதம் பற்றி தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.
உலகத்தரம் வாய்ந்த உள்ளூர் பல்கலைக்கழகங்களில் பயின்ற சிங்கப்பூரர்களில் பலரும் வெளிநாடுகளுக்குச் சென்று சிறப்புறப் பணி ஆற்றி வருகின்றனர்.
அந்த வகையில், நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயின்ற திரு பவன் ஜெய்பிரகாஷ், 2016ஆம் ஆண்டிலிருந்து ஹாங்காங்கில் வசித்தபடி 'சௌத் சைனா மார்னிங் போஸ்ட்' பத்திரிகைக்குப் பணியாற்றி வருகிறார். இந்த ஆண்டு முதல் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யிலிருந்து மூத்த ஆசிய வட்டாரச் செய்தியாளராக திரு பவன் செயலாற்றி வருகிறார்.
இந்த நிலையில், மோசமடைந்து வரும் கொவிட்-19 நிலவரத்தைக் கருத்தில்கொண்டு இவர் சிங்கப்பூருக்குத் திரும்ப பரிந்துரைக்கப்பட்டார்.
இவர் வாஷிங்டனிலிருந்து சான் ஃபிரான்சிஸ்கோ சென்று, அங்கு இருந்து யுனைடெட் ஏர்லைன்ஸ் வழியாக நேரடியாக சிங்கப்பூர் வந்துசேர்ந்தார். சிங்கப்பூரர்களுக்கான அந்தச் சிறப்பு விமானத்தில் பாதி இருக்கைகள் நிரம்பின.
கடந்த மார்ச் 25ஆம் தேதி காலை 6.30 மணியளவில் இவர் சாங்கி விமான நிலையத்தை வந்தடைந்தார். விமான நிலையத்திலேயே இருமுறை இவரது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட, பின்னர் 14 நாட்கள் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு தொடர்பான படிவங்களைப் பூர்த்தி செய்துவிட்டு வீடுதிரும்பினார்.
அதைத் தொடர்ந்து, அடுத்த 14 நாட்களுக்கு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டிலிருந்தவாறு பணியைச் செய்து வந்த திரு பவன், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை தமக்குக் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் அந்த குறுஞ்செய்தியைத் திறந்து குறிப்பைப் பின்பற்ற, அவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்ற விவரம் உரிய அதிகாரிக்குச் சென்று சேர்ந்தது.
மகன் தாயகம் திரும்பி, பாதுகாப்பாக இருக்கிறார் என்ற மனநிறைவு இவரது பெற்றோர்களுக்கு. ஆனால், ஒரு செய்தியாளராக அமெரிக்காவில் இருந்தபடி கிருமித்தொற்று நிலவரத்தைப் பற்றி எழுத முடியவில்லையே என வருந்துகிறார் 32 வயதான திரு பவன்.
அரசியல் செய்தியாளரான இவர், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் சிங்கப்பூர் வழிமுறைகள் பாராட்டுக்குரியவை என்றார்.
"மக்கள் இங்கு ஓரளவுக்கு இயல்பான வாழ்க்கையை வாழ்கின்றனர். எந்த நேரத்திலும் உணவு வாங்க உணவுக் கடைக்குs செல்ல முடிகிறது. அரசாங்கத்தின் விதிமுறைகளை மக்கள் பின்பற்றுகின்றனர். ஏனெனில் மக்கள் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்," என்றார் திரு பவன்.
மேலும், குறுகிய காலத்திற்குள், வீட்டில் இருக்கும்படி உத்தரவிடப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கிய அரசாங்க தொழில்நுட்ப அமைப்பின் முயற்சி, இதுபோன்ற நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் சாமர்த்தியத்தையும் தயார்நிலையையும் வெளிக்காட்டுவதாக இவர் குறிப்பிட்டார்.
தற்போது வீட்டிலிருந்தவாறு வேலை செய்வதில் எந்தச் சிரமமும் இல்லை என்ற திரு பவன், அடுத்த சில மாதங்களுக்கு சிங்கப்பூரிலேயே இருப்பார்.
"வேலைக்காக இப்போது ஹாங்காங் சென்றால் 14 நாட்களுக்கு தடைக்காப்பு உத்தரவைப் பின்பற்ற வேண்டும். பின் அங்கிருந்து சிங்கப்பூர் திரும்பினால் இங்கும் 14 நாட்கள் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவைப் பின்பற்ற வேண்டும். இதற்கிடையே, சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் நடந்தால், இந்த உத்தரவுகள் வேலைக்கு இடையூறாக இருக்கும். வரும் வாரங்களில் கிருமித்தொற்று நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்தே எந்த முடிவையும் எடுக்க முடியும்," என்கிறார் திரு பவன்.
இம்மாதம் 9ஆம் தேதியுடன் இவருக்கான வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு நிறைவடைந்தது.

