சுமார் மூன்று மாதங்களுக்குமுன் காலாங் சமூக மன்றம் வழங்கிய வண்ணம் தீட்டும் வகுப்புகளில் சேர்ந்தார் திருவாட்டி ச.சாந்தா, 67.
கொவிட்-19 நிலவரம் மோசமடைய, இதுபோன்ற பொழுதுபோக்கு வகுப்புகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
தம் பணியிலிருந்து ஓய்வுபெற்ற நிலையில், இவருக்கு இதுபோன்ற கலைத்திறன் வகுப்புகள்தான் பொழுதைப் பயனுள்ள வழிகளில் கழிக்க உதவின.
கொவிட்-19 நோய் பரவலை முறியடிப்பதற்கான அதிரடித் திட்டம் நடப்பிற்கு வந்ததிலிருந்து வெளிப்புற பொழுதுபோக்கு நடவடிக்கைகளை இவர் தற்காலிகமாக நிறுத்த வேண்டியதாயிற்று.
இருப்பினும், தமக்குப் பிடித்த விஷயங்களை இவரால் தொடர்ந்து செய்ய முடிகிறது.
ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவில் அதிக ஆள்நடமாட்டம் இல்லாத விடியற்காலை பொழுதில் இவர் மெதுநடை பயிற்சி செய்கிறார்.
சமூக மன்றத்தில் இவர் சேர்ந்த 'வாட்டர்கலர் பெயிண்டிங்' வகுப்புகள் இப்போது 'வாட்ஸ்அப்' செயலிவழி நடத்தப்படுகின்றன.
பங்கேற்பாளர்களுக்கு வகுப்பாசிரியர் ஒரு கருப்பொருளை கொடுத்து அதனை வீட்டில் செய்யச் சொல்வார். அதன்படி, வீட்டில் 'வாட்டர்கலர் பெயிண்டிங்' நடவடிக்கையில் திருவாட்டி சாந்தா ஈடுபடுவார்.
ஓவியத்தைப் படம் எடுத்து வாட்ஸ்அப்பில் ஆசிரியருக்கு இவர் அனுப்புவார். ஓவியத்தை மதிப்பிட்டு ஆசிரியர் கருத்து கூறுவார். இவ்வழி கற்றல், கற்பித்தல் சாத்தியமாகிறது.
"வகுப்புக்கு நேரடியாக செல்ல முடியாது என்றாலும் வீட்டில் இருந்தவாறு கலை நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறதே என்ற மனநிறைவு கிடைக்கிறது. இத்தருணத்தில் முடிந்தவரை மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொழுதைக் கழிக்க விரும்புகிறேன்," என்றார் திருவாட்டி சாந்தா.
செய்தி: ப. பாலசுப்பிரமணியம்

