கொவிட்-19 கிருமித்தொற்று முறியடிப்பு நடவடிக்கைகள் மேலும் நான்கு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூர் இந்தியர்கள் பின்பற்ற வேண்டிய மூன்று முக்கிய அம்சங்களை சிண்டா அறங்காவலர்க் குழு ஆலோசகரும் செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு விக்ரம் நாயர் நினைவு படுத்தி இருக்கிறார்.
"மார்ச் மாதத்தில் சிங்கப்பூரில் கொரோனா கிருமி தொற்றியோர் எண்ணிக்கை நூற்றுக்கும் சற்றே அதிகமாக இருந்தது. இப்போது அது 12,000ஐக் கடந்துவிட்டது. தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களை அதிகளவில் கிருமி தொற்றியதே இதற்குக் காரணம்.
"சிங்கப்பூரர்களை, நிரந்தரவாசிகளைப் பொறுத்தமட்டில் கிருமித்தொற்று குறைவாக இருந்தாலும் நாம் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது. ஏனெனில் தடம் அறியப்படாத தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது, அறியப்படாத சிலர் மூலம் சமூகத்தில் கிருமி பரவி வருவதையே காட்டுகிறது.
"ஆகையால், கிருமிப் பரவலை மேலும் குறைக்கும் வகையில் தொடர்ந்து விழிப்போடும் சமூகப் பொறுப்போடும் இருந்து, ஒவ்வொருவரும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டியது அவசியம். அதன்மூலம் இந்த இக்கட்டான சூழலை நாம் பாதுகாப்பாகக் கடக்க முடியும்.
"நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் ஜூன் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் கீழ்க்கண்ட மூன்று முக்கிய அம்சங்களைப் பின்பற்றவேண்டும் என நினைவுறுத்துகிறேன்.
முடிந்த அளவிற்கு, குறிப்பாக மூத்த குடிமக்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும்.
அவசியமெனில் மட்டும் வெளியில் செல்லுங்கள்; முகக்கவசம் அணிய மறக்காதீர்கள்.
பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள் உங்களை அணுகும்பட்சத்தில் அவர்களுக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.
"இளையர்கள் சிலர் தங்களின் நண்பர்களைச் சந்தித்து அளவளாவ இன்னும் வெளியில் செல்கின்றனர் என்பதை அறிகிறோம். வீட்டிலேயே இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணரவேண்டும். அதன்மூலமே, தங்களைக் கிருமி தொற்றாமல் அவர்கள் பார்த்துக்கொண்டு, தங்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அது பரவாமல் தடுக்க முடியும். இணையம் அல்லது கைபேசி வழியாக அவர்கள் தங்களின் நண்பர்களுடன் தொடர்பிலிருக்க முடியும்.
"குறிப்பாக, பள்ளி மாணவர்கள் அடுத்த ஒரு மாத விடுமுறையை வீட்டிலேயே கழிக்க வேண்டியிருக்கும். இந்தச் சூழலில், தேவையின்றி வெளியில் செல்லும் ஆசையை அவர்கள் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
"முதியவர்களில் சிலரும் தேவையின்றி வெளியில் செல்வதாகவும் உணவு வாங்கி வெளியிலேயே சாப்பிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, 'குவே சாப்' வாங்கிய மூதாட்டி ஒருவர், கிட்டத்தட்ட அரை மணி நேரமாகப் பாதுகாப்பு இடைவெளித் தூதர்கள் முயன்றும், அவர் வீட்டிற்குச் செல்ல மறுத்த சம்பவம் எனக்கு வேதனை அளிக்கிறது. இறுதியில், அவருக்கு $300 அபராதம் விதிக்கப்பட்டது.
"நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்துக்கொள்ளவும் பாதுகாப்பு இடைவெளித் தூதர்களுக்கு ஒத்துழைப்பு நல்கவும் முதியவர்களை ஊக்குவிக்கிறேன். உங்களுக்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால், உங்களின் குடும்பத்தினரும் அன்புக்குரியவர்களும் மிகுந்த வருத்தமடைவர்.
"நாம் தள்ளித் தள்ளி இருந்தாலும் தொடர்ந்து தொடர்பில் இருக்க தொழில்நுட்பம் நமக்குக் கை கொடுக்கிறது. காணொளி அழைப்புகள், தொலைபேசி அழைப்புகள் அல்லது பல்வேறு இலவச கைபேசிச் செயலிகள் மூலமாக வீட்டைவிட்டு வெளியேறாமலேயே குடும்ப உறுப்பினர்களை, நண்பர்களைச் சந்திக்க முடியும்.
"பிள்ளைகளின் தேவைகளைச் சமாளித்தவாறே வீட்டிலிருந்தபடி வேலை செய்வது பெற்றோர்கள் பலருக்கும் சிரமமாக இருக்கலாம். பிள்ளைகளின் கற்றலுக்கு உதவுவது, ஒன்றாக அமர்ந்து உணவருந்துவது என ஒவ்வொன்றுக்கும் நேரம் ஒதுக்கி, வழக்கப்படுத்திக்கொண்டு, பிணைப்பை வலுப்படுத்திக்கொள்ளலாம்.
"உங்களது மனநலமும் மிக முக்கியம். குறித்த நேரத்தில் வேலையை முடிக்கும் வகையில் திட்டமிட்டு பணியாற்றுங்கள். இடையிடையே சிறிது நேரம் ஓய்வு எடுத்துக்கொள்வதும் அவசியம். மன, உணர்வுரீதியாக உதவி தேவைப்பட்டால் 1800-202-6868 என்ற தேசிய பராமரிப்பு நேரடி அழைப்பு எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.
"மெதுவோட்டம் செல்லலாம் அல்லது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம். ஆயினும், வெளியில் செல்லும்போது பாதுகாப்பான இடைவெளியை நினைவில் கொள்ளுங்கள்," என்று திரு விக்ரம் நாயர் தெரிவித்துள்ளார்.

