கொரோனா கிருமி உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில், அதை மனவலிமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்ற சிந்தனை 'கவிமாலை' எனும் சிங்கப்பூர்த் தமிழ்க் கவிஞர்களின் அமைப்பு உறுப்பினர்களிடையே மேலோங்கி இருந்தது.
உலகெங்குமுள்ள தமிழ்க் கவிஞர்கள் மூலமாக மக்களுக்கு நம்பிக்கை ஊட்டலாம் என்ற எண்ணத்துடன் அந்த அமைப்பினர் செயலில் இறங்கினர். அந்த எண்ணத்தில் பிறந்தது 'வல்லமை தாராயோ!' எனும் இலக்கிய ஆளுமைகளின் காணொளித் தொடர்.
"மக்கள் இழப்பிலும் சோர்விலும் தவிக்கும் நேரத்தில் தொலைவிலிருந்து தமிழால் அரவணைப்போம் என்ற நோக்கத்தில் இத்தொடரை உருவாக்கினோம்," என்றார் 'கவிமாலை' அமைப்பின் தலைவரான கவிஞர் இன்பா.
அந்த அமைப்பின் ஃபேஸ்புக் பக்கத்தில் பிரபல உள்ளூர், வெளிநாட்டுக் கவிஞர்களின் பிடித்த, ஊக்கமூட்டும் கவிதைப் படைப்புகளும் உரைகளும் இடம்பெற்று வருகின்றன. இதுவரை இந்தக் காணொளித் தொடரில் பிரபல கவிஞர்களான அறிவுமதி, சினேகன், தங்கம் மூர்த்தி போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
கொரோனா கிருமித்தொற்று போராட்டம் தொடர்பில் நேர்மறையான எண்ணங்களைத் தூண்டும் இப்படைப்புகள் ஒவ்வொன்றும் சுருக்கமான நடையில் எடுக்கப்பட்டவை.
இலங்கை, அமெரிக்காவில் வாழும் தமிழ்க் கவிஞர்களும் இத்தொடரில் இடம்பெறுவர் என்று தெரிவித்த கவிஞர் இன்பா, கொவிட்-19 நோய்ப் பரவல் முறியடிப்பு அதிரடித் திட்டம் முடியும் வரையிலாவது இத்தொடர் நீடிக்கும் எனக் குறிப்பிட்டார்.

