மொழிபெயர்ப்பு சேவை மூலம் தொண்டூழியம்

ப. பாலசுப்பிரமணியம்

கொவிட்-19 கிருமித்தொற்றால் சிங்கப்பூரில் அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

வெளிநாட்டு ஊழியர்களிடம் அவரவர் தாய்மொழியிலேயே கிருமித்தொற்றின் தாக்கத்தைத் தெரிவிக்கும் அவசர சூழ்நிலை ஏற்பட்டது. இதை அறிந்து உடனடியே உதவ முன்வந்த தொண்டூழியர்களில் ஒருவர் திருமதி வித்யா தாஸ்குப்தா. கடந்த சில ஆண்டுகளாகவே இவர் அரசு சார்பற்ற ‘Transient Workers Count Too’, ‘Healthserve’ போன்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் அமைப்புகளுடன் சேவையாற்றி வருகிறார்.

ஆங்கிலம் உட்பட இவருக்கு தமிழ், வங்காளம், மராத்தி, இந்தி ஆகிய மொழிகளும் தெரியும் என்பதால் தமது திறனை நல்ல காரியத்திற்குப் பயன்படுத்தினார்.

கடந்த மார்ச் மாதம், அலெக்சாண்டிரா மருத்துவமனையில் கொவிட்-19 தொற்றிய வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தொலைபேசி வழி வங்காள மொழிக்கான மொழிபெயர்ப்பு சேவை வழங்கினார்.

மேலும், மருத்துவமனையில் அவர்களுக்காக கொவிட்-19 தொடர்பான தகவல் சுவரொட்டிகளை ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழியில் மொழிபெயர்த்துத் தந்தார் திருமதி வித்யா. மருத்துவமனை குழுவினர் சேவையாற்றும் மூன்று தங்கும் விடுதிகளில், கொவிட்-19 கிருமித்தொற்று விவரம் மற்றும் சுகாதாரக் குறிப்புகள் தொடர்பான இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. நாளடைவில் அரசு சார்ந்த அமைப்புகளும் இவரது சேவையை நாடி வந்தன.

“அதிகரித்து வரும் கிருமித்தொற்று பாதிப்பைக் கருதி, குறுகிய நேரத்தில் தகவல்களை உடனுக்குடன் மொழிபெயர்த்து அனுப்பும் நெருக்கடி நிலை ஏற்பட்டது. பேச்சுத் தமிழும் எழுத்துத் தமிழும் வெவ்வேறு. எளிமையான மொழி நடையில் இருக்க வேண்டும், அதே சமயம் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் பொருத்தமானவை என்பதை உறுதிசெய்ய உள்ளூர் ஊடகத் தமிழ் செய்திகளையும் படித்தேன்,” என்று சொன்னார் திருமதி வித்யா. கடந்த ஏப்ரல், மே மாதங்கள் முழுக்க, ஒரு முழு நேர வேலையில் ஈடுபடுவது போல இம்முயற்சியில் முழுமூச்சாக இறங்கினார் இவர்.

“எந்தெந்த இடங்களில் நான் மொழிபெயர்த்த தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை உன்னிப்பாக கவனிக்கவில்லை. ஆனால் சாங்கி கண்காட்சி மையத் தற்காலிக கொவிட்-19 பராமரிப்பு வசதியிடத்தின் தகவல் ஒலிபரப்பில் அது இடம்பெற்றது,” என்று கூறினார் திருமதி வித்யா. தன்முனைப்பு தகவல்கள், உடற்பயிற்சி காணொளிகள், கொவிட்-19 சோதனைக்கான முக்கிய குறிப்புகள் எனத் தமிழ் எழுத்து மொழிபெயர்ப்பையும் குரல் பதிவுகளையும் இவர் கையாண்டார்.

“கொவிட்-19 கிருமித்தொற்றிலிருந்து சிங்கப்பூர் மீண்டு வர, வெளிநாட்டு ஊழியர்கள் சீக்கிரம் குணமடைய வேண்டும் என்பதை உணர்ந்தேன். எனது பங்கை ஆற்ற முடிந்ததில் மனமார்ந்த திருப்தி அடைகிறேன்,” என்றார்.

ஒரு சமூக நிறுவனத்தின் தொழில்முனைவராகும் தம் இலக்குக்கு இத்தொண்டூழியப் பணி இட்டுச் செல்லும் என தாம் நம்புவதாக தெரிவித்தார் நிதித் துறையில் பல ஆண்டு அனுபவம் பெற்றுள்ள 49 வயது திருமதி வித்யா.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!