வசதிகுறைந்த குடும்பங்களுக்கு ஆதரவு பொட்டலங்கள்

வசதிகுறைந்த குடும்பங்களுக்கு ஆதரவு பொட்டலங்கள்

2 mins read
410c2976-d90b-4ed1-abd1-e8dc9c5b2a20
கொவிட்-19 சூழலில் அனைவரது பாதுகாப்பையும் உறுதிசெய்யும் அதே வேளையில் ஆதரவுத் திட்டத்திற்கான பொட்டலங்களையும் சங்கம் வழங்கியது. படம்: சிங்கப்பூர் இந்தியர் சங்கம் -

அத்தியாவசிய உணவுப்பொருட்களையும் வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் 100 வசதி குறைந்த குடும்பங்களுக்கு வழங்கும் திட்டத்தை சிங்கப்பூர் இந்தியர் சங்கம் தொடங்கியுள்ளது.

சங்கம் அமைந்துள்ள ஜாலான் புசார் குழுத் தொகுதியில் வசிக்கும் வெவ்வேறு இனத்து குடும்பங்கள், 'புரோஜெக்ட் கொவிட் எய்ட்' திட்டம் மூலம் பலனடைவர்.

நிர்வாகக் குழு, சங்க உறுப்பினர்கள், தொண்டூழியர்கள் ஆகியோர் வாம்போ சமூக மன்றத்துடன் இணைந்து இத்திட்டத்திற்கான பணிகளை மேற்கொண்டனர்.

சங்கத்திற்கு வாம்போ சமூக மன்றத்தின் சமூகச் சேவை ஊழியர்கள் வழங்கிய பெயர்ப் பட்டியலைக் கொண்டு வட்டாரத்திலுள்ள வசதிகுறைந்த குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன.

"சமூகத்தை ஈடுபடுத்துவதும் சமூகச் சேவை ஆற்றுவதும் எங்களின் இலக்குகளில் அடங்கும்," என்றார் இந்தியர் சங்கத்தின் தலைவர் திரு விஷ்ணு பிள்ளை.

இந்திய சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பதை சங்கம் ஒரு கொள்கையாகக் கொண்டுள்ளதால் அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க விரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"பல குடும்பங்களுக்கு ஏற்கெனவே நிதி நெருக்கடி உள்ள நிலையில், கொவிட்-19 தொற்றுச் சூழலும் சேர்ந்து அவர்களுக்குப் பல பிரச்சினைகளை உருவாக்கி இருக்கும்.

"இந்தச் சிரமமான காலகட்டத்தை அவர்கள் கடந்து வருவதற்கு உதவலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம்," என்றார் திரு விஷ்ணு.

சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து சுமார் $5,000 திரட்டப்பட்டது.

நிதிக்கென அவர்கள் திட்டமிட்டிருந்த இலக்கை அடைந்ததை அடுத்து, ஸ்ரீ நாராயண மிஷன் இல்லவாசிகளுக்கும் சங்கத்தின் உதவியை நாடியோருக்கும் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

இதுவரை ஆதரவுப் பொட்டலங்கள் ஜூலை மாதம் 3, 11 ஆகிய தேதிகளில் வழங்கப்பட்டன. இறுதி நாளான நாளை பொட்டலங்கள் வழங்கப்படும்.