அர்ப்பணிப்புமிக்க பணிக்கு கிடைத்த தாதியர் விருது

2 mins read
50bffd1a-7558-4a08-8bea-0b2341e68128
இவ்வாண்டிற்கான சுகாதார அமைச்சின் தாதியர் தகுதி விருதை திருமதி சித்ரா பெற்றார். படம்: சாங்கி பொது மருத்துவமனை -

சார்ஸ், எச்1என்1, கொவிட்-19 என சிங்கப்பூர் சந்தித்த சவாலான காலகட்டத்தில் அயராது போராடி வந்துள்ளார் திருமதி பா.சித்ரா, 40. சாங்கி பொது மருத்துவமனையில் மூத்த தாதியாக பணியாற்றும் இவர், நிபுணத்துவ வெளிநோயாளி மருந்தகத்தை நிர்வகிக்கிறார்.

ஞாபக மறதி நோயாளிகளைப் பரிசோதிப்பது, அவர்களைப் பராமரிப்பவர்களுக்கு அறிவுரை வழங்குவது, சக தாதிகளுக்கும் பொதுமக்களுக்கும் அந்நோய் குறித்த பயிற்சி அளிப்பது போன்றவை இவரது பணிகளில் சில.

நோயாளிகளின் ஆரோக்கியத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 20 ஆண்டுகளுக்குமுன் தாதிமை துறையில் இவர் கால்பதித்தார்.

பணியில் பேரார்வம் வெளிப்பட, இவ்வாண்டின் சுகாதார அமைச்சின் தாதியர் தகுதி விருதை திருமதி சித்ரா பெற்றார்.

தங்களது பணியில் சிறந்தோங்கி, நிபுணத்துவ மேம்பாட்டில் ஈடுபட்டு, தாதிகளின் பணிக்கு ஆதரவு திரட்ட முயலும் தாதிகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.

சார்ஸ் நோய் சிங்கப்பூரை 2003ல் பாதித்தபோது, முதியோர் பராமரிப்பில் கவனம் செலுத்திய திருமதி சித்ராவுக்கு ஐயம் ஏற்பட்டது. அந்நோய் எளிதில் பரவக்கூடியதால் தம் குடும்பத்தினரையும் இது பாதித்துவிடுமோ என்ற பயம் இவருக்கு இருந்தது.

"தாதிகளாக கிருமித்தொற்றைக் கையாள்வது எங்களது கடமை என்பதை உணர்ந்து நோய் பரவாமல் இருப்பதற்கான வழிமுறைகளை முறையாக கடைப்பிடித்து எங்களது பங்கினை ஆற்றினோம்,'' என்று நினைவுகூர்ந்தார் திருமதி சித்ரா.

தகுந்த மருத்துவ உடைகளை அணிவது, நோயாளிகளைப் பார்க்க வருவோருக்கு நேரக் கட்டுப்பாடு விதித்தல் போன்ற புதிய வழிமுறைகள் அவ்வப்போது அறிமுகமாக, அதற்கு இணங்க இவரும் இவரது குழுவினரும் செயல்பட்டனர்.

கிருமித்தொற்றின் தாக்கம் வேறுபட்டாலும், அவற்றை முறைப்படி கையாளும் அனுபவம் கொரோனா கிருமித்தொற்றையும் சமாளிக்க உதவியுள்ளதாக இவர் சொன்னார்.

முதிய நோயாளிகளுடன் தமக்கு மொழி வேறுபாடு இருந்தாலும் அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக்கொள்ள முடிந்ததாகவும் ஒவ்வொரு முறையும் அவர்கள் மருத்துவமனைக்கு வரும்போது தம்மை தேடி வந்து வாழ்த்து கூறுவது வழக்கமான ஒன்று என்று திருமதி சித்ரா தெரிவித்தார். ஞாபக மறதி நோய் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே அதிகரிக்க வேண்டும் என்று கருதும் இவர், ஞாபக மறதி நோயாளிகளைப் பொறுத்தவரை, அவர்களது கடந்தகால வாழ்க்கையைப் பற்றி இன்னும் ஆழமாக தெரிந்துகொள்ள முனைந்தால் அவர்களைத் திறம்பட சமாளிக்க முடியும் என்று விளக்கினார்.