சவால்மிக்க வர்த்தகச் சூழலில் ஆதரவு தரும் திட்டம்

சவால்மிக்க வர்த்தகச் சூழலில் ஆதரவு தரும் திட்டம்

2 mins read
ea7e9223-9749-48ff-9931-c58122010236
மூத்த ஊழியர் திருவாட்டி நைனா ஷா தமது நிறுவனத்திற்கு ஏற்றவர் எனக் கூறும் 'ஐடிஎஃப் சிங்கப்பூர்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி ராஜ்ஸ்ரீ பதி (வலது), நிலைமை சீரானதும் வேலை ஆதரவுத் திட்டத்தின்மூலம் அவர் போன்ற மூத்த ஊழியர்களை வேலைக்கு எடுக்கத் திட்டமிட்டுள்ளார். படங்கள்: ராஜ்ஸ்ரீ பதி -
multi-img1 of 2

சுற்றுப்பயணத் துறையை நம்பி இருக்கும் பல வர்த்தக நிறுவனங்கள் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிப்படைந்துள்ளன.

வர்த்தகச் சந்திப்புகள் தொடர்ந்து இணையம் வழியாக நடைபெற்று வரும் நிலையில், பெரிய அளவிலான அனைத்துலக வர்த்தக மாநாடுகள் மீண்டும் இடம்பெற சற்றுக் காலம் ஆகலாம்.

இது ஒட்டுமொத்த பயணத் துறைக்கும் ஒரு சவால்மிக்க காலகட்டம் என்றார் தொழில்துறை வடிவமைப்பு மாநாடுகளை ஏற்பாடு செய்யும் 'ஐடிஎஃப் சிங்கப்பூர் (IDF Singapore)' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி ராஜ்ஸ்ரீ பதி.

இவரது நிறுவனம் இந்திய உணவுப் பொருட்களையும் இறக்குமதி செய்து வருகிறது.

இந்தியாவில் ஊரடங்கு நடை முறையில் இருப்பதால் சிங்கப்பூருக்குத் திரும்ப முடியாமல் அங்கிருந்த படியே திருமதி ராஜ்ஸ்ரீ செயல்பட்டு வர, இவரின் மூத்த ஊழியரான திருவாட்டி நைனா ‌‌‌ஷா சிங்கப்பூர் அலுவலக நிர்வாகத்தைக் கவனித்து வருகிறார்.

அலுவலகச் செயல்பாடுகளை திருவாட்டி நைனா ‌‌‌ஷா திறம்பட மேற்கொண்டு வருவது திருமதி ராஜ்ஸ்ரீக்குப் பேருதவியாகவுள்ளது.

"சில ஆண்டுகளுக்கு முன்புதான் சிங்கப்பூரில் இந்நிறுவனத்தை புதிதாக தொடங்கினேன். ஆகையால், நிறுவனம் நிலைத்தன்மை அடையும் வரையில் ஒரே நேரத்தில் பல ஊழியர்களை வேலைக்கு எடுப்பது சாத்தியமில்லை," என்றார் திருமதி ராஜ்ஸ்ரீ.

அனுபவமிக்க ஊழியர் ஒருவரிடம் வேலைப் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என விரும்பிய இவர், அதற்காக தமது வர்த்தக நண்பர்களின் ஆலோசனையைச் செவிமடுத்தார். அவர்கள் திருமதி ராஜ்ஸ்ரீயிடம் வேலை ஆதரவுத் திட்டத்தை (Career Support Programme - CSP) பரிந்துரைத்தனர்.

சிங்கப்பூர் ஊழியரணி (WSG), வேலைவாய்ப்பு, வேலைத்தகுதி கழகம் (e2i) இணைந்து வழங்கும் இத்திட்டம், நிறுவனங்கள் தகுதிபெறும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (PMETs) ஆகியோரை வேலைக்கு எடுக்க ஊக்குவிக்கிறது.

இத்திட்டத்தின் மூலம் அவர், 63 வயதான திருவாட்டி நைனா ‌‌‌ஷாவை சில ஆண்டுகளுக்குமுன் மேலாளராகப் பணியமர்த்தினார்.

கணக்கிடுதல், வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தல், ஏற்றுமதி/இறக்குமதி படிவங்களைப் பூர்த்தி செய்தல், அலுவலக நிர்வாகம் போன்ற பணிகளை திருவாட்டி நைனா ஷா மேற்கொண்டு வருகிறார்.

"திருவாட்டி நைனா ஷா அனுபவமிக்கவர். ஏற்கெனவே தம் தந்தையின் சொந்தத் தொழிலில் உதவியிருக்கும் அவர், சொந்தமாக முடிவு எடுக்கும் திறன் கொண்டவர், பொறுப்புடன் வேலையில் செயல்படக்கூடியவர், எங்கள் நிறுவனத்திற்கு ஏற்றவர்," எனப் புகழ்ந்த திருமதி ராஜ்ஸ்ரீக்கு வேலை ஆதரவுத் திட்டத்தின் மூலம் சரியான ஊழியரைத் தேர்வு செய்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.

திருமதி ராஜ்ஸ்ரீ போன்ற முதலாளிகளின் வர்த்தகத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் திருவாட்டி நைனா ஷா போன்ற அனுபவமிக்க நிபுணர்களை தமது நிறுவனம் அணுக வேலை ஆதரவுத் திட்டம் வகைசெய்கின்றது.

நிலைமை சரியாகி வர்த்தகச் சூழல் மேம்பட்டதும், இத்திட்டத்தின் வழி வேலை தேடிக்கொண்டு இருக்கும் மூத்த ஊழியர்களை வேலைக்கு எடுக்க திருமதி ராஜ்ஸ்ரீ திட்டமிட்டுள்ளார்.

சிங்கப்பூர் ஊழியரணி (WSG) எப்படி உங்கள் வேலை தேடும் முயற்சிக்கு உதவ முடியும் என்பதை அறிய விரும்பினால், go.gov.sg/careeradvice7 என்ற இணையப் பக்கத்திற்கு சென்று வேலை வாய்ப்பு வழிகாட்டியைச் சந்திக்க பதிவுசெய்யலாம்.