இர்ஷாத் முஹம்மது
சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு தனது 85வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வண்ணம் தனது வாசகர்களுக்குக் கடந்த ஜூலை மாதம் இணையத்தில் போட்டி ஒன்றை நடத்தியது.
அதில் வாசகர்கள் எளிய கேள்விகளுக்குப் பதிலளித்து வெற்றிக்குத் தகுதிபெற்றனர்.
தமிழ் முரசு செய்தித்தாளைக் கைக்கணினி மூலம் படிக்கும் வகையில் அண்மையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், தமிழ் முரசு இணைந்து கைக்கணினி தொகுப்பை அறிமுகம் செய்தன.
மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று வரும் கைக்கணினி தொகுப்பு, இந்தப் போட்டியின் வெற்றியாளர்களுக்கான பரிசாக வழங்கப்பட்டது.
போட்டியில் பங்கேற்ற அனைவருக்குமே ஒரு வாரத்திற்குத் தமிழ் முரசு செய்தித்தாளை இணையத்தில் படிக்கும் சந்தா இலவசமாக வழங்கப்பட்டது.
இப்போட்டியில் வென்ற மூவருக்கு 'சாம்சங் கேலக்சி டேப் ஏ வைஃபை' கைக்கணினி, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், தமிழ் முரசின் ஈராண்டு சந்தாவுடன் பரிசாக வழங்கப்பட்டது.
வெற்றியாளர்களில் ஒருவரான திரு அஷோக் குமார் ராமச்சந்திரன், தாம் தொடர்ந்து தமிழ் முரசைப் படித்து வந்தாலும் கைக்கணினி மூலம் இனி படிக்க முடியும் என்பது மேலும் மகிழ்ச்சித் தருவதாகக் கூறினார்.
மூத்த மகள் உயர்நிலைப் பள்ளியிலும் இளைய மகள் தொடக்கநிலை நான்கிலும் பயில்வதாக கூறிய அவர், மாணவர் முரசு, தமிழ் முரசு செய்தித்தாட்களை அவர்கள் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.
வங்கி ஒன்றில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றும் அவர், உள்ளூர் தமிழ் அமைப்புகளில் இணைந்து பல்லாண்டுகளாகச் சேவையாற்றி வருகிறார். தமது மகள்களை உயர்தமிழ் பயில அவர் ஊக்குவித்தார்.
வெற்றி பெற்ற மற்றொருவர் நான்கு ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த ஊழியர் குமார் ஜோபின் சஜோ, 27.
கடந்த மே மாதம் 18ஆம் தேதி அவரது சொந்த ஊரான கன்னியாகுமரியில் அவருக்குத் திருமணம் நடக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்ட நிலையில் கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து அந்த ஏற்பாடுகள் ஒத்திவைக்கப்பட்டன.
"எப்போதுதான் விமானச் சேவைகள் தொடங்கும் என்பதை அறிய தினமும் தமிழ் முரசின் இணையப் பக்கத்தைப் பார்த்து வந்தேன். அப்போது இப்போட்டிக்கான அறிவிப்பைக் கண்டு அதில் கலந்துகொண்டேன். நான் வெற்றி பெறுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை," என்று கூறினார் ஜோபின்.
"சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதுபோன்ற போட்டிகளில் நான் வெற்றி பெற்றதே இல்லை," என்று கூறிய அவர், தமது வருங்கால மனைவியிடம் இதைப் பற்றி கூறி மகிழ்ச்சியைப் பகிர்ந்ததாகவும் தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் வசிக்கும் அவர், கொவிட்-19 சூழலால் இதுவரை மூன்று முறை இடம் மாற்றப்பட்டுள்ளார்.
இருப்பினும் தங்கும் விடுதியில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து கைக்கணினியில் செய்திகளைப் படித்து வருவதாக அவர் சொன்னார்.
"எங்களில் சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்திகளையும் படிக்கிறோம். மற்றவர்கள் தினமும் இந்தக் கைக்கணினி மூலம் தமிழ் முரசைப் படித்து வருகிறோம். விடுதியில் முடங்கிக் கிடக்கும் எங்களுக்கு இந்தக் கைக்கணினி மூலம் கிடைக்கும் செய்திகளைப் படிப்பதில் ஒருவித மனநிம்மதி கிடைக்கிறது," என்றார் அடுத்த மாதம் திருமணத்திற்காக தமிழகம் செல்லவிருக்கும் ஜோபின்.
தினமும் தமிழ் முரசு அச்சுப் பிரதியைத் தவறாமல் படிக்கும் 19 வயது நித்யா வெங்கடேசன் இப்போது கைக்கணினியில் செய்திகளைப் படித்து வருகிறார்.
தமிழ் முரசு சந்தாதாரர்களாக இருக்கும் குடும்பத்தில் இளம் உறுப்பினரான நித்யா, செய்தித்தாளில் இடம்பெற்ற விளம்பரத்தைக் கண்டு இணையம் மூலம் போட்டியில் கலந்துகொண்டார்.
தனது தந்தையிடம் மட்டுமே கூறிவிட்டு இந்தப் போட்டியில் கலந்துகொண்டவர் வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் அளவுகடந்த மகிழ்ச்சி கொண்டார்.
"இனி நான் போகும் இடத்தில் எல்லாம், பேருந்தில் பயணம் செய்யும்போது உட்பட எளிதாகப் படிக்கலாம்.
"செய்திகளைப் பெரிதாக்கிப் படிப்பது, மற்றவர்களுடன் பகிர்வது என பல அம்சங்கள் இதில் இருப்பதால் மிகவும் சுவாரசிய அனுபவத்தைத் தருகிறது," என்றார் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் தாதிமைத் துறையில் பயிலும் இந்த முதலாம் ஆண்டு மாணவி.
தமிழ் முரசு தொகுப்புகளில் ஒன்றுக்குச் சந்தா சேர்ந்து வெல்லுங்கள்!
மேற்கண்ட வெற்றியாளர்களைப் போல நீங்களும் சாம்சங் கேலக்சி டேப் ஏ (வைஃபை) கைக்கணினிக்கு உரிமையாளர் ஆகலாம். கைக்கணினியில் தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
மின்-செய்தித்தாள்கள் இடம்பெறும். இந்தச் செய்தி கைக்கணினி உள்ளடங்கும் இந்த மின்னிலக்கத் தொகுப்புக்கான மாத சந்தா $29.90 மட்டுமே. உங்களது விருப்பத்திற்கேற்ப மற்ற தொகுப்புகளும் உள்ளன. தமிழ் முரசு சந்தா தொகுப்புக்குப் பதிவு செய்து உங்களுக்கு அல்லது உங்கள் அன்புக்குரியவர்களுக்கு 'பிலிப்ஸ் ஏர் பியூரிஃபையர்', 'பேனசோனிக் மைக்ரோவேவ் அவன்' போன்ற கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள். சந்தாதாரராக சேர இந்த 'கியூஆர்' குறியீட்டை வருடவும் அல்லது tmsub.sg/deepavali இணையத்தளத்திற்குச் செல்லவும் அல்லது 6388 3838 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். இம்மாதம் 30ஆம் தேதிக்குள் சந்தாதாரராக சேருவோருக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும்.

