ப. பாலசுப்பிரமணியம்
கட்டுமான, பொறியியல், வர்த்தக மேம்பாட்டுத் துறைகளில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உடையவர் திரு அஜோய் தாஸ்குப்தா, 64.
இவர் வேலை செய்துகொண்டிருந்த இந்திய நிறுவனம் ஒன்று நிதி பிரச்சினைகளை எதிர்கொண்டதால், நிறுவன இயக்குநர் பதவியிலிருந்து 2016ஆம் ஆண்டு திரு அஜோய் விலகினார்.
மற்றொரு வேலையை தேடிக்கொள்ளலாம் என்று நினைத்தவருக்கு அது சுமூகமாக அமையவில்லை.
தமக்குப் பொருத்தமான எத்தனையோ வேலைகளுக்கு விண்ணப்பித்தும் நிறுவனங்களிடம் இருந்து பதில் ஒன்றும் வரவில்லை.
அதையடுத்து சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பின் உதவியை திரு அஜோய் நாடினார். வேலை தேடுவோரின் திறனுக்கேற்ப அவர்களை நிறுவனங்களில் பணியமர்த்தும் சேவை வழங்கும் 'இஞ்சியர்ஸ்' (Ingeus) எனும் நிலையத்திடம் திரு அஜோய் உதவி நாட சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு பரிந்துரைத்தது.
திரு அஜோய் போன்ற நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்களுக்கு (பிஎம்இடி) பொருத்தமான வேலைகளைத் தேடித் தரும் சேவையை 'இஞ்சியர்ஸ்' வழங்குகிறது.
வேலைக்கு விண்ணப்பிக்க தேவையான தற்குறிப்பை (Resume) எப்படி முறையாக எழுதுவது, நேர்முகத் தேர்வுக்கு எப்படி தம்மைத் தயார்செய்வது, தமது நிபுணத்துவ தொடர்புகளை எப்படி மேலும் விரிவாக்குவது போன்றவற்றை அங்குள்ள வாழ்க்கைத்தொழில் பயிற்றுவிப்பாளர்கள் அவரிடம் பகிர்ந்துகொண்டனர்.
"எனது வேலை அனுபவத்திற்கு மற்றொரு வேலை கிடைப்பது அவ்வளவு கடினமாக இருக்காது என்று நினைத்தேன். ஆனால் நிலவரம் அதற்கு மாறாக இருந்தது. பலமுறை முயன்றும் வேலை கிடைக்காமல் துவண்டுபோகும் தருணங்களில் வாழ்க்கைத்தொழில் பயிற்றுவிப்பாளர்கள் தொடர்ந்து ஊக்கம் கொடுத்து நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தினர்," என்று திரு அஜோய் தெரிவித்தார்.
ஓராண்டு காலமாக இவர் வேலை தேடினார். தமது நிபுணத்துவ நட்பு வட்டத்தில் உள்ள ஒரு நண்பரின் பரிந்துரைப்பில் இவருக்கு நிறுவனம் ஒன்றில் வர்த்தக மேம்பாட்டு நிர்வாகி வேலை கிடைத்தது. இவருக்கு அந்நிறுவனத்தில் வழங்கப்பட்ட சம்பளம் முன்னைய பணியைவிட குறைவாக இருந்தாலும் தமக்கு பழக்கப்பட்ட துறையில் மீண்டும் இடம்பெற திரு அஜோய்க்கு வாய்ப்பு கிட்டியது.
அங்கிருந்து முன்னேறிய இவர், இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து எரிசக்தித் துறைக்கு சேவை வழங்கும் 'ஆர்ஜேஎம்' எனும் பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றில் அதே வர்த்தக மேம்பாட்டு நிர்வாகி பணியில் ஈடுபடுகிறார்.
"அதிக வேலை அனுபவம் இருந்தும் வேலை கிடைக்கவில்லையே என்று நினைக்கும்போது கவலை ஏற்படுவது இயல்பு. மனவுளைச்சலான அந்தக் காலகட்டத்தில் நான் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. வயதையும் தாண்டி ஒருவரால் தங்களது நிறுவனத்திற்குப் பங்களிக்க முடியும் என்பதை முதலாளிகள் கருத்தில் கொண்டால், அது முதலாளிகள், தொழிலாளிகள் என இருதரப்புக்கும் பயனளிக்கும்," என்று திரு அஜோய் வலியுறுத்தினார்.
"தென்கிழக்காசியாவின் வர்த்தகக் கலாசாரத்தைப் பற்றிய பழுத்த அனுபவமும் அறிவும் திரு அஜோய்க்கு இருந்ததால், வர்த்தக மேம்பாட்டு நிர்வாகி வேலைக்கு அவர் ஏற்றவராக இருந்தார். அதோடு, எவ்வித கலாசாரப் பின்னணியில் இருந்து ஒருவர் வந்தாலும் அவருடன் நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக்கொள்ளும் தன்மையை திரு அஜோய் கொண்டிருப்பதால், இப்பதவிக்கு அவரைத் தேர்ந்தெடுப்பது எளிதாக இருந்தது," என்று 'ஆர்ஜேஎம்' நிறுவனத்தின் பொது மேலாளர் திரு மெத்யூ ஷீல்ட்ஸ் தெரிவித்தார்.
சிங்கப்பூர் ஊழியரணி அமைப்பு எப்படி உங்கள் வேலை தேடும் முயற்சிக்கு உதவ முடியும் என்பதை நீங்கள் அறிய விரும்பினால், go.gov.sg/careeradvice7 என்ற இணையப் பக்கத்திற்கு சென்று வாழ்க்கைத்தொழில் வழிகாட்டி ஒருவரிடம் ஆலோசனை பெற பதிவு செய்யலாம்.

