எஸ்.வெங்கடேஷ்வரன்
தஞ்சோங் பகார், தியோங் பாரு வட்டாரங்களில் வாடகை வீடுகளில் வசிக்கும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு தீபாவளி உணர்வைக் கொண்டுசேர்க்கும் வண்ணம் தீபாவளி அன்பளிப்புப் பைகள் விநியோகம் செய்யும் நடவடிக்கை கடந்த மாதம் 31ஆம் தேதி நடைபெற்றது. தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். குடும்பங்களிடம் அவர் அன்பளிப்புப் பைகளை வழங்கினார்.
தஞ்சோங் பகார், தியோங் பாரு இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் ஒருங்கிணைத்த இந்த விநியோக முயற்சிக்கு அடித்தள அமைப்புகள், குடியிருப்பாளர் குழு உறுப்பினர்கள், தொண்டூழியர்கள், மக்கள் கழக ஊழியர்கள் ஆகியோர் கைகொடுத்தனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த முயற்சிக்கு 'ஹார்ட்வார்மர்ஸ்' என்ற தொண்டூழிய அமைப்பு அன்பளிப்புப் பைகளை வழங்கி வருகிறது.
இவ்வாண்டின் கொவிட்-19 கொள்ளைநோய் சூழலைக் கருத்தில்கொண்டு 'விட்டமின் சி' மாத்திரைகள், மின்னிலக்க வெப்பமானி போன்ற பொருட்கள் பைகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்திய மரபுடைமை நிலையம் வழங்கிய மயில் படம் கொண்ட 'அங் பாவ்' பாக்கெட்டுகள், ரொக்கம் நிரப்பப்பட்ட 'நெட்ஸ்' அட்டை போன்றவற்றுடன் வழக்கமான உணவுப் பொருட்களும் பைகளில் அடங்கும். ஏழு புளோக்குகளில் வாடகை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு மொத்தம் 75 அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பையும் $120 முதல் $150 வரை மதிப்புடையது.

