மாணவர்களிடம் கற்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிவிடக்கூடிய வகையில் கற்பித்தலில் புத்தாக்க அணுகுமுறைகளைக் கையாளும் ஆங்கில ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் விருதை இந்த ஆண்டு நால்வர் பெற்றுள்ளனர்.
அவர்களில் செயின்ட் ஜோசப்ஸ் கல்வி நிலையத்தில் ஆங்கிலமும் மெய்யியலும் கற்றுத்தரும் ஆசிரியர் கார்த்திகேயன் கோவிந்தராஜனும், 34, ஒருவர்.
செயின்ட் ஆண்ட்ரூஸ் உயர்நிலைப்பள்ளியில் 17 ஆண்டுகளாகப் பணியாற்றும் திருவாட்டி சுஜாதா பரமதயாளன் விருதை வென்றுள்ள மற்றொருவர்.
அளவிட முடியாத மனித உணர்வுகளை இனம் கண்டு, அவற்றுக்கு உரு கொடுப்பது மொழி என்பதால் பிறருக்கு மொழியாற்றலை வளர்க்கும் பணியில் ஈடுபட விரும்புவதாகக் கூறும் திரு கார்த்திகேயன், தேசிய பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.
பின்னர் பிரிட்டனின் லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியம், பிரிட்டிஷ் கொலம்பியாவில் கற்பித்தல் துறையில் முதுகலைக் கல்வி ஆகியவற்றைப் பயின்று, பின்னர் தேசிய கல்வி நிலையத்தில் கல்விக்கான முதுநிலை பட்டயப்படிப்பை முடித்தார். ஆங்கில மொழி மட்டுமின்றி தமிழ் மற்றும் இந்தியர்கள் தொடர்புடைய பல்வேறு தலைப்புகளிலான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.
"கனவுகளை நனவாக்க முயலும் இளையர்களுக்கு ஆதரவாக இருந்து பணி செய்யும் உறுதியும் ஆர்வமும் ஆசியர்களுக்கு இருக்கவேண்டும். கற்பித்தலின் தரத்தைக் கட்டிக்காக்கும் அதே நேரத்தில் வகுப்புகளைச் சுவாரசியமாக்கவேண்டும்," என்று இவர் கூறுகிறார்.
வகுப்பறையைத் தாண்டிய உண்மை உலகச் சூழலில் மாணவர்களுக்குத் தேவைப்படும் பயனுள்ள பலவற்றையும் கற்பிக்கும் திருவாட்டி சுஜாதா, தேசிய பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழி மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர்.
ஆசிரியர்களும் தொடர்ந்து நிறைய நூல்களைப் படிக்கவேண்டும். படித்ததன் வழியாக ஏற்படக் கூடிய சிந்தனைகளை வகுப்பில் மாணவர்களுடன் பகிர்ந்து அவர்களது ஆர்வத்தைத் தூண்டவேண்டும்," என்று இவர் தெரிவித்தார்.
"மாணவர்களின் கருத்தையும் கேட்டறிந்து தேவைப்படும்போது என் அணுகுமுறையை மாற்றிக்கொள்வேன்," என்றார் இவர்.
இந்த விருதைப் பெற்றது தொடர்பில் பேருவகை அடைவதாகக் கூறும் இந்த ஆசிரியர்கள், எதைப் படித்தாலும் அதனை ஆராயும்படி மாணவர்களுக்கு ஆலோசனை தெரிவித்தனர்.
செய்தி: கி. ஜனார்த்தனன்

