சிங்கப்பூர் சமுதாயத்தின் நிலைத்தன்மைக்கு வலுவான திருமணங்களும் குடும்ப உறவுகளும் முக்கிய பங்காற்றுவதை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த திருமணங்களுக்கு, முன்னுதாரணமாகத் திகழும் மூத்த தம்பதியருக்குத் திருமணப் பொன்விழாவை ஆண்டுதோறும் திருமணப் பதிவகம் நடத்தி வருகிறது.
அதிபர் ஹலிமா யாக்கோப்பின் கையொப்பம் கொண்ட பாராட்டுச் சான்றிதழ், விருதுடன் இத்தகைய தம்பதியர் சிறப்பிக்கப்படுகிறார்கள்.
இந்த ஆண்டு சிறப்பிக்கப்பட்ட 160 தம்பதியரில் திரு சுப்பிரமணியம் கிருஷ்ணன் - சகுந்தலா தம்பதி இடம்பெற்றுள்ளனர்.
கோலாலம்பூரில் பிறந்த திரு சுப்பிரமணியம், 1960ஆம் ஆண்டில் வேலைக்காக சிங்கப்பூர் வந்தார்.
தமிழகத்தின் திருச்செந்தூரில் பிறந்த திருமதி சகுந்தலா, 1954ல் தமது 18ஆவது வயதில் சிங்கப்பூருக்கு வந்தார். இருவருக்கும் 1965ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் சூழ திருமணம் நடந்தது. பெற்றோர் முடித்த திருமணம் என்றாலும் சுப்பிரமணியம் - சகுந்தலா இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.
பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாக மனப்பான்மை ஆகிய பண்புகள் தங்கள் மண வாழ்விற்கு அடித்தளமாக இருந்து வந்துள்ளதாக 82 வயதாகும் இத்தம்பதியர் தெரிவிக்கிறார்கள்.
"என் கணவர் இயல்பாகவே மிகவும் பொறுமைசாலியாகவும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தையும் கொண்டவராக இருப்பதால் குடும்பத்தையும் வேலையையும் பார்த்துக்கொண்டது எனக்குச் சிரம மானதாக இல்லை.
"வீட்டு வேலைகளிலும் பிள்ளை களைப் பார்த்துக்கொள்வதிலும் அவர் உதவியாக இருப்பார்," என்று 35 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றி இருக்கும் திருமதி சகுந்தலா கூறினார்.
மனைவியின் தியாக மனப்பான் மையையும் குடும்பத்தின் நலனை மிக முக்கியமானதாகக் கருதும் பண்பையும் மதிப்பதாகக் கூறிய திரு சுப்பிரமணியம், பல பிரச்சினைகளை மனைவியின் ஒத்துழைப்புடன் சமாளித்து தாங்கள் மீண்டு வந்ததாகக் கூறினார்.
பெற்றோரால் அதிக செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் இன்றைய தலைமுறையினருக்கு எல்லாமே சுலபமாகக் கிடைப்பதால் பலவற்றை யும் சிந்தித்துச் செயல்படும் ஆற்றல் அவர்களிடம் இன்னும் மேம்படவேண்டிய நிலையில் இருப்பதாகத் தெரிகிறது என்று மூன்று பேரக்குழந்தைகளுக்குப் பாட்டியான திருமதி சுப்பிரமணியம் கூறினார்.
இத்தம்பதியர் உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு அருகே தனியே வசிக்கிறார்கள்.
சிங்கப்பூர் யாதவர் சங்கம், இத்தம்பதியை திருமணப் பதிவக விருதிற்கு முன்மொழிந்தது.

