இர்ஷாத் முஹம்மது
கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்களாகக் களமிறங்கினர் சுகாதாரப் பராமரிப்புத் துறை ஊழியர்கள். இவர்களை கௌரவிக்கும் நோக்கிலும் எளிதில் பாதிப்படையக்கூடிய குடும்பங்கள், குழந்தைகளிடம் விழாக்காலக் குதூகலத்தைக் கொண்டுசெல்லவும் ஸ்கூட் விமான நிறுவனம் ஆண்டிறுதி 'ஸ்கூட்-மஸ் சர்பிரைஸ்' கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இரண்டு வெவ்வேறு நாட்களில் மொத்தம் நான்கு முறை நடத்தப்பட்ட கொண்டாட்ட நிகழ்வுகளில் 188 பேர் கலந்துகொண்டனர். இவர்களைக் கிட்டத்தட்ட 100 ஸ்கூட் தொண்டூழியப் பணியாளர்கள் வரவேற்று உபசரித்தனர்.
விமானச் சிப்பந்திகள் 32 பேர், விமானிகள் 24 பேர் ஒன்றுசேர்ந்து 'போயிங் 787 டிரீம்லைனர்' விமானத்தில் நடத்திய நிகழ்ச்சியில் மக்கள் விரும்பும் பல அம்சங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நீண்டகாலம் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யமுடியாத சூழலில் வெகுநாட்களுக்குப் பின்னர் விமானத்தில் ஏறிய வருகையாளர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
விமானியின் அறை உட்பட உணவு வைப்பிடம், விமானச் செயல்முறைகள், வெவ்வேறு இருக்கைப் பிரிவுகளின் அம்சங்கள் போன்றவற்றை விமானச் சுற்றுலாவின்போது வந்திருந்தவர்களால் காணமுடிந்தது.
கண்கவர் அலங்காரங்களுடன் அழகிய தோற்றம் அளித்த விமான நிலையத்தில், உற்சாகமூட்டும் பல விளையாட்டுப் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. விமானியின் அறைக்கு வருவோரை உபசரித்து விளக்கம் அளித்த விமானிகளில் ஒருவர் முதல் அதிகாரி சரவணன் அய்யாவு.
"நமது சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் நமது பாதுகாப்புக்காகவும் நலனுக்காகவும் பல தியாகங்களைச் செய்துள்ளனர். அவர்களுக்கு விமானத்தைச் சுற்றிக் காட்டி முகங்களில் மகிழ்ச்சியையும் புன்னகையையும் பார்த்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்," என்றார் சரவணன்.
"வானவில்லைப் பார்க்க வேண்டுமானால் கண்டிப்பாக மழைக்காலத்தைத் தாண்டிதான் ஆகவேண்டும். அது என்ன பெரிய சவால்? அதையெல்லாம் நாம் தாண்டி வந்துவிட்டோம். சந்தோஷமாக இருங்கள். 2021 எல்லாருக்கும் நல்ல ஆண்டாக அமையும் என்கிற நம்பிக்கை இருக்கிறது," என்று பகிர்ந்தார் சரவணன்.
விமானத்தின் உள்ளே வானவில் நிறங்களில் வண்ண விளக்குகள் ஒளியூட்டப்பட்டு வந்திருந்தவர்களுக்கு உணவு உபசரிக்கப்பட்டது. விளையாட்டுகளில் வெற்றிபெற்ற குழந்தைகள் ஸ்கூட் விமானி சீருடையணிந்து தங்களின் பெற்றோர்களுக்கு உணவு உபசரித்த காட்சியும் அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டது.
கொவிட்-19 கொள்ளை நோயின் தொடக்கக் கட்டத்தில், சிங்கப்பூரர்கள் நாடு திரும்பவும் அத்தியாவசிய விநியோகச் சங்கிலிகள் பாதிப்பின்றி செயல்படவும் ஸ்கூட் நிறுவனம் அதன் விமானங்களைத் தொடர்ந்து இயக்கி வந்தது.
இருப்பினும் அதையடுத்து நிறுவனத்தின் விமானிகள், சிப்பந்திகளில் பலருக்குச் சம்பளக் குறைப்பு ஏற்பட்டது. துணை வருமானத்திற்காக வேறு இடத்தில் வேலை செய்ய வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. நெருக்கடி தந்த ஓர் ஆண்டாக இருந்தாலும் ஸ்கூட் விமானச் சிப்பந்திகளும் விமானிகளும் கைகோத்து இந்த அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

