இந்து இளங்கோவன்
கீதாரி இடையர்களைப் பற்றி சொந்தமாக ஒரு நாவலை எழுதி வெளியிட ஆயத்தமாகிறார் 'சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர் கவிதைப் போட்டி' வெற்றியாளர் திரு ராஜேந்திரன் விஜயகாந்த் (படம்), 29. இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்ட பரமக்குடி கிராமத்தில் பிறந்து வளர்ந்த இவர், ஏழாண்டுகளாக சிங்கப்பூரில் கட்டுமானப் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்தியா திரும்ப இருந்த தம் நண்பர் பிரபாகரன், அவரின் மகனுக்கு விளையாட்டுப் பொம்மை வாங்குவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் தேக்காவிற்குச் சென்றிருந்தார். புலி, பூனை, பசு, கார் என அக்கடையில் அடுக்கி வைக்கப் பட்டிருந்த பலவிதமான பொம்மைகளைக் கண்டதும் திரு விஜயகாந்த் மனதிலும் அவரது குழந்தைப் பருவம் நிழலாடியது.
அந்த நிகழ்வை மையமாகக் கொண்டு அவர் புனைந்த கவிதை, 'தேக்காவில் பொம்மை வாங்குபவன்'. வெளிநாட்டு ஊழியர் கவிதைப் போட்டியில் அக்கவிதை முதல் பரிசை வென்றது. நா. முத்துக்குமார், வைரமுத்து போன்ற கவிஞர்களின் படைப்புகளை விரும்பிப் படிக்கும் விஜயகாந்த், இந்த ஏழு மாதங்கள் வீட்டில் அதிக நேரம் செலவிட்டபோது 'கீதாரி என்னும் போர்வீரன்' கதைப் புத்தகத்தை எழுதத் தொடங்கியுள்ளார்.
"கீதாரி என்பது சங்க காலம் முதல் இருந்து வரும் ஒரு தொன்மையான சமூகம். கிடை ஆடுகளையும் மாடுகளையும் பார்த்துக்கொள்ளும் ஒரு சமூகம். இச்சமூகத்தினர் சந்திக்கும் சவால்களையும் அவர்களது வாழ்க்கையையும் கதை வடிவமாக எழுதிக்கொண்டிருக்கிறேன்," என்றார் திரு விஜயகாந்த். இவரின் பெற்றோரும் கீதாரி சமூகத்தினரே.
'கவிதை என்பது உலகத்தை இணைக்கக்கூடிய ஒரு திறவுகோல்' என்பதை நம்பும் விஜயகாந்த் தம்மைச் சுற்றியுள்ள இயற்கை, சுற்றி நடக்கும் நிகழ்வுகள் போன்றவற்றைப் பற்றிய தமது சிந்தனைகளைக் கவிதை வடிவில் வடித்து வருகிறார்.
இவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு 'மனித சிறகுகள்' என்னும் ஒரு கவிதைப் புத்தகத்தை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறார்.
தமது 16 வயதிலிருந்தே கவிதைகள் எழுதிவந்த இவர், தாம் எழுதும் கவிதைகளை யாரும் அதிகம் படித்ததில்லை என்று கூறினார். சிங்கப்பூருக்கு வந்தபின் தனிமையில் இருக்கும்பொழுது மேலும் நிறைய கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் பிறந்ததாக கூறினார்.
"காதல் கவிதைகள் மட்டுமல்ல, நான் பார்க்கும் எல்லாவற்றுக்காகவும் பறக்கும், கவலையுறும், இறக்கும் உயிர்களுக்காகவும் மழை, மேகம், வண்டு, மொட்டு, உதிர்ந்த மலர் என பலவற்றைப் பற்றியும் நான் கவிதை எழுதுவேன். கவிதை எழுதுவதில் நான் முதிர்ச்சி பெற்றுவிட்டேனா எனத் தெரியாது. ஆனால், எழுத வேண்டும் எனும் வேட்கை எப்போதும் என்னுள் இருந்து வருகிறது," என்று சொன்னார் திரு விஜயகாந்த்.

