- ப. பாலசுப்பிரமணியம்
சிலர் 'நியூமகாகோல் நிமோனியா'வை (Pneumococcal Pneumonia), சளிக்காய்ச்சல் என்று எண்ணிவிடுகின்றனர். ஆனால், அது தவறு. நுரையீரலைப் பெரும் பாதிப்புக்குள்ளாக்கும் தன்மைகொண்ட தொற்று நோய் அது. 'பேக்டீரியா' என்ற நுண்ணுயிரியால் அது உருவாவது வழக்கம். நெருக்கத்திலிருக்கும் மற்றொருவருக்கு எளிதில் பரவக்கூடிய தன்மை அதற்கு உள்ளது. இருமல் வழியாகவும் அது பரவலாம்.
இதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எண்ணுவதே தவறாகும். ஏனெனில், சிங்கப்பூரில் அதிக மரணம் விளைவிக்கும் நோய்களின் பட்டியலில் இது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது என்பது அச்சுறுத்தும் ஓர் உண்மையாகும். இரண்டு அல்லது அதற்கும் குறைவான வயதுடைய பிள்ளைகளுக்கும் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினருக்கும் இந்நோய் தொற்றும் சாத்தியம் அதிகமென்று 'சாட்டா காம்ஹெல்த்' (SATA CommHealth) மருத்துவ நிலையச் சேவைகள் வழங்கும் அமைப்பின் இயக்குநர் டாக்டர் ஷெரல் கிலன் (படம்) தெரிவித்தார்.
நுரையீரல் நோய், இதய நோய், ஆஸ்துமா உள்ளவர்கள், புகைப்பிடிப்பவர்கள், 'கீமோதெரப்பி' போன்ற கடும் சிகிச்சைகளுக்குச் சென்று நோய் எதிர்ப்பாற்றல் குறைவான அளவில் கொண்டவர்கள், சுவாசத்திற்கு உதவும் கருவிகளைப் பயன்படுத்தியவாறு மருத்துவமனையில் தங்க அனுமதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களையும் இது தாக்கக்கூடும் என்றார்.
இந்திய சமூகத்தினரிடையே நுரையீரல் நோய், நீரிழிவு நோய், ஆஸ்துமா போன்ற நாள்பட்ட நோய் கொண்டவர்களுக்கும் இந்நோய் தொடர்பில் கவனம் தேவை.ஒருவர் ஆரோக்கியமாக இருந்தாலும் முதுமைக் காலத்தை அடைந்ததும் நிமோனியா அவரைத் தாக்கக்கூடும் என்று டாக்டர் ஷெரல் கிலன் எச்சரித்துள்ளார். எனவே, இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட்டுக்கொள்வதே சிறந்த வழியாகும்.
சளியுடன் கூடிய இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல், சுவாசிக்கும்போது மார்புப் பகுதியில் வலி, களைப்பு, மனநலத் தெளிவில் மாற்றம் அல்லது குழப்பம், குறிப்பாக முதியவர்களிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அது நிமோனியா நோயாக இருக்கலாம்.
சுகாதார அமைச்சின் பரிந்துரைப்படி, 65 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் நிமோனியாவுக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது என்று கூறப்பட்டுள்ளது. 'பெரியவர்களுக்கான தேசிய தடுப்பூசித் திட்ட அட்டவணை' (National Adult Immunisation Schedule) நிபந்தனைகளுக்குத் தகுதிபெறும் சிங்கப்பூர் குடிமக்களுக்கு நிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசிக் கட்டணத்தில் சலுகைகள் உண்டு. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது. பலதுறை மருந்தகங்களிலும் 'சாஸ்' தனியார் மருந்தகங்களிலும் (CHAS GPs) நிமோனியாவுக்கு எதிரான தடுப்பூசி சலுகைகளைப் பெற்றுக்கொண்டு பயன்பெறலாம்.
முன்னோடித் தலைமுறை அட்டை, மெர்டேக்கா தலைமுறை அட்டை அல்லது சாஸ் (CHAS) அட்டையைக் கொண்டு இச்சலுகைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலே குறிப்பிடப்பட்ட அட்டைகளில் எதனைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்து, 10 வெள்ளி முதல் அதிகபட்சமாக 63 வெள்ளி வரையிலான கட்டணத்தை இத்தடுப்பூசிக்காக தனியார் மருந்தகத்தில் ஒருவர் செலுத்துவதாக இருக்கும். நிமோனியா நோய் பற்றி மேல் விவரம் அறிய, https://www.knowpneumonia.sg/ இணையப் பக்கத்திற்குச் செல்லலாம்.