இந்து இளங்கோவன்
தஞ்சாவூர் ஓவியம் தனித்துவம் வாய்ந்த ஒன்று. கடந்த நூற்றாண்டுகளில் தெய்வங்களின் உருவங்களை வரைவதற்காக பயன்படுத்தப்பட்ட இந்த ஓவிய முறை, மக்கள் வரைந்து மகிழும் ஒன்றாக தற்காலத்தில் உருவெடுத்துள்ளது.
சிங்கப்பூரில் இக்கலையை சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் கற்றுக்கொடுத்து வந்தது. அங்கு கற்று வந்த திருவாட்டி சித்ரலேகா குமார், 2016ஆம் ஆண்டு சுயமாக ஹூஸ் (Hues) என்ற தஞ்சாவூர் ஓவியக் கலைப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்.
மூன்று மாணவர்களுடன் தொடங்கப்பட்ட இப்பள்ளியில் இப்போது 9 வயதிலிருந்து 70 வயது வரை 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் உள்ளனர்.
சிங்கப்பூரில் நாம் அதிகம் பார்த்திராத, கேள்விப்பட்டிராத இந்த ஓவியங்கள், 'வைபவம்' என்னும் கண்காட்சியில் மக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.
கலைஞர்கள் தங்களது ஓவியத் திறனை வெளிப்படுத்தும் ஒரு நல்ல தளத்தை வழங்குவதே இந்தப் பிரத்தியேக தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சியின் நோக்கமாகும்.
தஞ்சாவூர் ஓவியம் பார்ப்பதற்கு எளிமையானதாக இருந்தாலும் அதன் செயல்முறையும் வேலைப்பாடும் மிக நுணுக்கமான ஒன்று. ஓர் ஓவியப் படைப்பை உருவாக்குவதற்குச் சில வாரங்களிலிருந்து ஓர் ஆண்டு வரை ஆகலாம். கடந்த சில ஆண்டுகளாகவே இந்த மறக்கப்பட்ட கலை ஒரு மறுமலர்ச்சியைப் பெற்று வருகிறது.
தென்னிந்திய பாரம்பரிய கலைகளுக்கிடையே மதிப்பிற்குரிய கலையாக இது பெயர் பதித்துள்ளது என்கிறார் திருவாட்டி சித்ரலேகா.
'வைபவம்' ஓவியக் கண்காட்சி வரும் வெள்ளிக்கிழமை, மார்ச் 26ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை 'விஷுவல் ஆர்ட்ஸ்' (Visual Arts) மையத்தில் நடைபெறும். கண்காட்சியில் 'ஹூஸ்' பள்ளியின் 34 மாணவர்கள் உருவாக்கிய 75 ஓவியப் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்படும்.