கி. ஜனார்த்தனன்
சிங்கப்பூர் கவிஞர்கள் சமர்ப்பித்து உள்ள தமிழ்க்கவிதைகள், ஆசிய சாதனைப் பதிவு புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. கவிதை வரிகளைப் பாடலாக்கும் அரிய சாதனையில் கவிதைகள் அங்கம் வகித்துள்ளன.
சிங்கப்பூர், மலேசியா, இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்தோரிடமிருந்து மொத்தம் முப்பத்து மூன்று கவிதைகள், கடந்தாண்டு டிசம்பர் 27ஆம் தேதியன்று பஹ்ரேனிலுள்ள மனாமா நகரைச் சேர்ந்த இசைக்கலைஞர் பால் முகம்மதுவிடம் நேரலையாக வழங்கப்பட்டன. ஒவ்வொரு கவிதையையும் உடனுக்குடன் பெற்றுக்கொண்டு தொடர்ச்சியாக கீதங்கள் உருவாக்கித் தாமே இசையமைத்துப் பாடினார் 61 வயது திரு பால்.
இவர் மூன்று மணி நேரம் தொடர்ச்சியாகப் பாடல்கள் உருவாக்கிய நிகழ்வு, ஜனவரி 4ஆம் தேதியன்று ஆசிய சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.
"திரு பாலின் இசையமைப்பு எனக்குப் பெருமளவில் மனத்திருப்தியை அளித்தது," என்று சிங்கப்பூரிலிருந்து கவிதை ஒன்றை அனுப்பிய வர்த்தகர் மதியழகன் இசைக்கவி, 54, தெரிவித்தார்.
சிங்கப்பூரிலிருந்து கவிதையை அனுப்பிய மற்றொருவரான பகுதிநேர ஆசிரியர் அன்னலட்சுமி குப்புசாமி, 64, தம் தந்தையைப் பற்றிய அந்தக் கவிதைக்கு திரு பாலின் இசையமைப்பு மேலும் உயிர் சேர்த்ததாகத் தெரிவித்தார்.
"என் கவிதைக்குள் பொதிந்திருந்த உணர்வுகளை இவர் சிறப்பாக வெளிக்கொண்டு வந்தார்," என்று அவர் தெரிவித்தார்.
மனாமா நகரிலுள்ள அனைத்துலக இந்தியப் பள்ளியில் கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாகப் பணிபுரிந்த இசை ஆசிரியர், இந்தச் சாதனையைப் படைத்ததில் பேருவகை அடைவதாகக் கூறினார்.
"ஒரே இடத்தில் இருந்தவாறு வேகவேகமாக கவிதைகளுக்கு இசையமைத்து, அவற்றைப் பாடி கருவிகளை வாசித்தது, உற்சாகம் கொடுத்தது," என்றார்.
திரு பாலின் சாதனையைத் தகுந்த சோதனைகளுடன் உறுதி செய்ததாக ஆசிய சாதனைப் புத்தகக் குழு புதுடெல்லியிலிருந்து தமிழ் முரசுக்குத் தெரிவித்தது.
நிகழ்ச்சியை சிங்கப்பூரிலிருந்து ஏற்பாடு செய்து இயக்கிய எழுத்தாளரும் குறும்படத் தயாரிப்பாளருமான மில்லத் அகமது, கொவிட்-19 கிருமிப்பரவலால் துவண்டுபோன கவிஞர்களுக்கு ஊக்கமளிக்க இதற்கு ஏற்பாடு செய்ததாகத் தெரிவித்தார்.
"சாதனை முயற்சிக்காக இவ்வாறு உலகத் தமிழர்களை ஒன்றுதிரட்டுவது நல்லது என நினைத்தேன்," என்று அவர் கூறினார்.
பங்கேற்பாளர்கள் முன்வந்து கொடுத்த கவிதைகளின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததாகவும் நிகழ்ச்சியின் இணை ஏற்பாட்டாளரான மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இயல் பதிப்பகத்தின் நிறுவனர் திருவாட்டி பொன் கோகிலம் தெரிவித்தார். மார்ச் 8ஆம் தேதியன்று சிங்கப்பூரைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் நடத்தப்பட்ட பாராட்டு நிகழ்ச்சியில் கவிஞர் க.து.மு இக்பால் பங்கேற்றார்.

