ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க (சிங்கப்பூர் கிளை) ஏற்பாட்டில், இம்மாதம் 7ஆம் தேதியன்று இணையம் வழியாக 'கொரோனாவை மறப்போம்! வெற்றிக் கதவைத் திறப்போம்!' என்ற தலைப்பில் தமிழகத்தின் புகழ்பெற்ற பேச்சாளர் கவிஞர் திரு தங்கம் மூர்த்தி, தன்முனைப்புச் சொற்பொழிவு ஆற்றினார்.
புத்தாக்கச் சிந்தனை, விடாமுயற்சி ஆகியவற்றுடன் செயல்படும் அதேவேளையில் ஒருவரைஒருவர் புரிந்துகொண்டு 'நான்' என்ற நிலையிலிருந்து 'நாம்' எனும் நிலைக்குச் செல்வதன் மூலம் வெற்றிக் கதவுகளைத் திறக்க முடியும் என்று நகைச்சுவையும் கவிச்சுவையும் கலந்து சிறப்புரையாற்றினார். சங்கத்தின் தலைவர் பட்டயக் கணக்காய்வாளர் முனைவர் மு. அ. காதர் வரவேற்புரை வழங்கினார்.
அண்மையில் இயற்கை எய்திய ஜமால் முஹம்மது கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் முஹம்மது சாலிஹ் ஆற்றிய கல்விப் பணிகளை நினைவுகூரும் அங்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் தலைவர் அமரர் திரு சுப. அருணாச்சலம் ஆற்றிய தமிழ்ப் பணிகளையும் நினைவுகூர்ந்து இருவரது ஆத்மசாந்திக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பொதுமக்களுடன் சிங்கப்பூரின் பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்களும் சங்கத்தின் உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

