சிங்கப்பூர் தமிழர் இயக்கம், இவ்வாண்டின் தமிழ் மொழி விழாவை முன்னிட்டு 'இளையரே எழுக இன்தமிழ் சிறக்க' என்ற நிகழ்ச்சிக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பாடு செய்திருந்தது.
கடந்த 67 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த இயக்கம், மாதந்தோறும் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக அதன் தலைவர் திரு ரெ.செல்வராஜு தமது நிகழ்ச்சியின் தொடக்க உரையில் தெரிவித்தார். இவ்வாண்டு வெவ்வேறு நிலைகளில் பயிலும் மாணவர்களுக்கு வெவ்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
பாலர் பள்ளி நிலைக்குக் கதை விளக்கம் கூறுதல், தொடக்கநிலை 1 மற்றும் 2க்கு திருக்குறளை ஒட்டிக் கதை கூறுதல், தொடக்கநிலை 3, 4 மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டி ஆகிய அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
தொடக்கநிலை 5 மற்றும் 6 மாணவர்கள், தங்கள் பெற்றோருடன் பங்கேற்கும் வகையில் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட 165 மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். இவர்களில் 22 பேருக்கு வெற்றியாளர் பரிசும் இதர பங்கேற்பாளர்களுக்கு ஊக்கப் பரிசும் வழங்கப்பட்டன. முன்பதிவு செய்யப்பட்ட காணொளிகளில் வெற்றியாளர்களின் காணொளிகள் நிகழ்ச்சியின்போது இடம்பெற்றன.
வளர்தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு மனோகரன், சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு ரா. அன்பரசு, இந்தியாவிலிருந்து சிறப்புரை ஆற்றிய திருமதி பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் இணைந்திருந்தனர்.
டாக்டர் பர்வீன் சுல்தானா, தமது உரை மூலம் மாணவர்களுக்கிடையே கலந்துரையாடல் அங்கத்தைத் தொடங்கி வைத்தார்.
"உலகத்தில் நான் சென்று பார்த்த அத்தனை நாடுகளிலும் சிங்கப்பூர் மண் மிகச் சிறப்பு பெற்ற மண்ணாக இருக்கிறது.
"வேறு நாடுகளில் தமிழை முன்னெடுக்கச் செய்யும் இயக்கங்கள் உண்டு என்றாலும் சிங்கப்பூரின் அணுகுமுறை மிக நுட்பமானது. கல்வி புலத்திலும் அறிவு புலத்திலும் உணர்வு ரீதியிலும் எப்படி எந்தக் கட்டமைவில் எடுத்துச் செல்லவேண்டும் என்பதில் மிக நுட்பமான முறையைக் கையாள்வதில் சிங்கப்பூரர்கள் முன்னிற்கின்றனர்," என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
கலந்துரையாடல் அங்கத்தில் மாணவர்கள் தங்களின் கருத்துகளை டாக்டர் பர்வீனுடன் பகிர்ந்து பயனடைந்தனர்.
செய்தி: கி. ஜனார்த்தனன்

