ப. பாலசுப்பிரமணியம்
சிறுகதையை எழுத அதிகம் சிந்திக்க வேண்டும், ஈர்ப்பு குறையாமல் வாசகர் மனதை வசப் படுத்தவும் வேண்டும்.
இதையொட்டி தமிழ்முரசு நாளிதழை தோன்றுவித்த தமிழவேள் கோ சாரங்கபாணியின் நினைவு சொற்பொழிவுக்கு சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
'தமிழ் மொழி விழாவை முன்னிட்டு, 'ஸும்' மெய்நிகர் தளத்தில் 'தமிழ் கற்பித்தலில் சிறுகதை படிப்பும் படைப்பும்' எனும் தலைப்பிலான இச்சொற்பொழிவு கடந்த 10ஆம் தேதி நடந்தது.
இதில் தமிழ் ஆசிரியர்கள் சிறுகதைகளைப் பற்றி இன்னும் ஆழமாக அறிந்து, அவற்றைத் படைப்பாற்றல் வழி மாணவர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் உத்திகள் குறித்து தெரிந்துகொண்டனர்.
சுமார் 200 பேர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் பிரபல நகைச்சுவை பேச்சாளரும் 'கலைமாமணி' புகழ் தமிழ்த் துறை பேராசிரியருமான முனைவர் கு. ஞானசம்பந்தன் சொற்பொழிவு ஆற்றினார்.
மாணவர்களுக்கு கற்பிக்கும் முன், அவர்கள் விரும்புகின்ற செய்திகளை அவர்களது பாணியிலேயே பேசிப் பழகிக்கொள்ள ஊக்குவிக்கும் திரு கு. ஞான சம்பந்தன், கதை சொல்லப் பழக வேண்டும் என்றார். மேலும், கதை சொல்பவரின் குரல் வலிமையும் கதையை காட்சிபடுத்துகின்ற விதமும் மனதில் பதிவதற்கு உதவும்.
சிறுகதையின் தொடக்கம் சுவாரசியமாக தொடங்குவதும் முக்கியமாம்.
'புதுமைப்பித்தன்' எழுதிய நூல்கள் அமரத்துவம் பெற்றவை என்றும் அவர் எழுதிய 'கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்' போன்ற நூல்களை வாசித்துக் கேட்க வேண்டுமென்றும் பரிந்துரைத்தார்.
ஒரு நல்ல சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அது படித்த முடித்த பிறகும் நினைவில் இருக்க வேண்டும் என்றார்.
கதை எழுதும் மாணவர்களின் கற்பனைத் திறனை அதிகரிக்க ஆசிரியர்கள் மாணவர்களை வகுப்பறைக்கு அப்பால் வெளிப்புற நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டும் என்று திரு கு.ஞானசம்பந்தன் வலியுறுத்தினார்.
"ஆசிரியர்களும் மாணவர்களும் அதிகம் வாசிக்கும்போது படைப்பாற்றல் இயல்பாக வந்து சேரும். அவ்வாறே படைப்பாற்றலை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும்போது தமிழ் மொழி வாழும் மொழியாக நிலைத்திருக்கும்," என்று கூறினார் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் திரு தனபால் குமார்.

