காலகாலமாக பிரபலம் அடைந்த உன்னதமான இந்தியக் கதைகளின் மத்தியில் மிக தனித்துவ மானது பஞ்சதந்திரக் கதைகள்.
விலங்குகளை அடிப்படையாகக் கொண்ட கதைகளின் தொகுப்புஇது. ஒவ்வொரு கதையின் மூலம் கூறப்படும் நன்னெறிகள் குழந்தைகளின் மனதில் நிலைத்திருக்கச் செய்யும். 'பஞ்சதந்திரக்கதை' என்ற நாடகத்தின் மூலம் இத்தகைய கதைகளுக்கு உயிரூட்டியுள்ளது அதிபதி இன்டர்நேஷனல் தியேட்டர் (Athipathi International Theatre) என்ற நிறுவனம். விழுமியங்கள் அடிப்படையிலான இந்த நாடகம், மாணவர்களின் சுயமரியாதையை உயர்த்தவும், அவர்கள் தங்களுடைய செயல்களுக்கு அதிக பொறுப்பை ஏற்கவும் உதவும்.
முன்பு படமாக்கப்பட்ட இந்நாடகம் ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மணிக்கு யூடியூப் மற்றும் ஃபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப் பப்பட்டது. அதிபதி நிறுவனத்திலிருந்து நடிக்கத் தெரிந்த இளையர்களும் பல வருடங்களாக மேடையில் நடித்த அனுபவம் கொண்டவர்களும் சில புதியவர்களும் நாடகத்தில் நடிகர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் 'அதிபதியன்ஸ்' (Athipathianz) என்று அழைக்கப் பட்டனர். 58 வயது திரு புகழேந்தி இந்நாடகத்தின் இயக்குநர் ஆவார். தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவும் டேஸல் பீட் (Dazzle Beat) நிறுவனமும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்தன.
மிகவும் குறைந்த நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்நாடகம், பச்சை திரையை பயன்படுத்தி படமாக்கப்பட்டது. கொவிட்-19 சூழ்நிலையால் படப்பிடிப்பின் போது குறைவான நடிகர்களே இருந்தார்கள். 20 அதிபதியன்ஸ் 36 கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அக்கதாபாத்திரங்களை உயிர்ப்பிக்க பல்வேறு வகையான முக ஒப்பனையும் ஆடை அலங்காரமும் பயன்படுத்தப்பட்டன. கதைக்கு ஏற்ப குறுகிய காலத்தில் நடிகர்களுக்கு ஒப்பனை செய்தவர் திருமதி யோகினி. காட்சிக்கு ஏற்ப அவர்களுக்கு ஆடை அணிய திருமதி யோகினியும் திரு சிவாவும் உதவினர். ஆடைகளின் வடிவமைப்பை திரு புகழேந்தியும் திருமதி யோகினியும் கலந்து முடிவு செய்தனர்.
இந்நாடகத்தில் பல வகையான பாத்திரங்களை ஏற்று தொடக்கநிலை 1 மாணவிகள் ஷிவானி ஸ்ரீ மற்றும் வேலு யாழினி நடித்தனர்.
அதிபதியில் ஆறு வருடங்களாக பயின்று வரும் யாழினி, "இந்த நாடகத்தின் மூலம் குழு உணர்வைவளர்த்துக்கொண்டேன். பாதுகாப்பான மேலாண்மை நடவடிக்கைகளைப் பின்பற்றி படம் பிடித்தது கடினமாக இருந்தது. இருந்தாலும் பின்பற்றினோம். அதை நினைத்து எனக்குப் பெருமையாக உள்ளது. இந்த அனுபவம் புதியதாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது" என்று கூறினார்.
"நாங்கள் அனைவரும் மார்ச் மாத விடுமுறையில் இதற்காக பயற்சி செய்தோம். திரு புகழேந்தி எங்களை தட்டிக் கொடுத்து ஆர்வத்தை ஊட்டினார். எல்லோரையும் சரிசமமாக பார்க்கும் அவரது பண்பு என்னை கவர்ந்தது. நமக்கு ஆர்வம் இருந்தால் நம் திறமையை அவர் வெளிக்கொண்டு வருவார். இந்த நாடகத்தின் பின்னால் நிறைய பேரின் உழைப்பு உள்ளது," என்று பகிர்ந்தார் ஷிவானி.
புகைப்படக் கருவியை கையாள்வதை கற்றுக்கொண்டதுடன், பச்சை திரையில் நடித்தது அவர்களுக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது. வாய்ப்பு அளித்த அனைவருக்கும் அவர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
"பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த நாடகம், பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் தமிழில் பேசுவதற்கான வழிமுறையாகவும், ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு தமிழை கற்றுக்கொடுக்கவும் பயன்படுத்தப்படும் என்று நம்புகிறோம். பஞ்சதந்திரக்கதைகள் 87 உள்ளன. அவை அனைத்தும் நாடகமாக உருவாக்கவே விரும்புகிறேன்" என்று கூறினார் திரு புகழேந்தி.
செய்தி: ஆர்த்தி சிவராஜன்

