இஸ்லாமிய சமயத்தில் கொண்டாடப்படும் பிரத்யேக தினங்களில் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் என இரு பெருநாட்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றன.
அந்த இரு பெருநாட்கள் குறித்த விளக்கங்களையும் முக்கியத்துவம் குறித்தும் உரையாடும் ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம். தேசிய நூலக வாரியமும் சிங்கப்பூர் புத்தக மன்றமும் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்குகின்றன.
இரண்டு பெருநாட்களுமே முஸ்லிம்களின் புத்தாண்டு அல்ல என்றும் தனித்துவமிக்க பாணியில் சிங்கப்பூரில் ஒரு மாத காலம் நோன்புப் பெருநாளை முஸ்லிம்கள் கொண்டாடுவது குறித்தும் அந்த உரையாடலில் பகிரப்படும்.
மேலும் இருபதாம் நூற்றாண்டில், புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் தென்கிழக்காசிய யாத்திரிகர்கள் பெரும்பாலோர் சிங்கப்பூரிலிருந்துதான் புறப்பட்டனர் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க தகவல்களின் மேல் விவரங்களை உரையாடலில் எதிர்பார்க்கலாம்.
முனைவர் முகமது இம்ரான் முகமது தாயீபுடன் நிகழும் இந்த ஆங்கில உரையாடல் அடுத்த மாதம் 8ஆம் தேதி மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை இணையம் மூலம் நடைபெறும்.
சிங்கப்பூர் மலாய், முஸ்லிம்கள் தங்களது தனிப்பட்ட கலாச்சாரச் சாயலில் இந்தத் திருவிழாக்களை எவ்வாறு அனுசரிக்கின்றனர் என்பதைத் தெரிந்துகொள்ள https://www.singaporetamil.org எனும் இணையத்தளத்தில் மேல் விவரங்களைப் பெறுங்கள்.

