நோன்புப் பெருநாளை முன்னிட்டு குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவும் வகையில் ஆதரவாளர் வழங்கிய பணம், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம் வழங்கிய அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை இந்திய முஸ்லிம் பேரவை வழங்கியது.
சிண்டா ஆண்டுதோறும் வழங்கும் பண்டிகைக் கால அன்பளிப்பு, 'பிஸ்மி இஸ்லாமிய வானொலி' வழங்கிய ரொக்கம் இரண்டையும் மொத்தம் 120 குடும்பங்களுக்குக் கடந்த இரு வாரங்களாக அவர்களது இல்லத்திற்கே தொண்டூழியர்கள் சென்று கொடுத்தனர்.
சிண்டா, முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்), பிஸ்மி வானொலி ஆகியவற்றுடன் 'டீம் நூர்' என்ற இளையர் குழுவும் கைகொடுத்தது.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிவாசிகள், ஜாமியா அற நிறுவனத்தின் தாதிமை இல்லவாசிகள், இந்திய முஸ்லிம் பேரவையிடம் உதவி பெற்று வருவோர் எனப் பல்லினச் சமூகத்திற்குச் சுமார் 500 உணவுப் பொட்டலங்களை 'டீம் நூர்' விநியோகம் செய்ய உதவியது. இந்திய முஸ்லிம் பேரவையுடன் அமைப்புகள் இணைந்து உதவியது இந்த நோன்புப் பெருநாளை மேலும் அர்த்தமுள்ளதாக்கியது.

