கடந்தாண்டு கிருமிப் பரவல் முறியடிப்புக் காலகட்டத்தில் 35 வயது திலகவதி ராஜசேகரம் தமது முதல் பிள்ளையைப் பெற்றெடுத்தார். ஓராண்டு ஆகியுள்ள நிலையில் பிள்ளைப்பேறு குறித்து இன்னும் சிறிது அச்சம் உண்டு என்று இவர் கூறுகிறார்.
"மீண்டும் கிருமிப் பரவல் அதிகரித்து வருகிறது. குழந்தை பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போட என்னைப் போன்ற பெற்றோரும் தயங்குவர் என்று நம்புகிறேன்," என்றார் மருத்துவக் கருவி உற்பத்தித் துறையில் பணியாற்றும் திருமதி திலகவதி. 2019ல் ஆகஸ்ட் மாதத்தின்போது கருத்தரித்த திலகவதி, கடந்தாண்டு ஏற்பட்ட கவலையும் அச்சமும் இன்றும் தமக்குள் இருப்பதாக தெரிவித்தார்.
வேலை ஆதரவுத் திட்டங்கள் நீட்டிக்கப்படுவதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டபோதும் பொருளியல் தாக்கத்தை ஈடுகட்ட அவை போதுமானதா என்பது குறித்து சிங்கப்பூரில் பொதுவான ஒரு கவலை உள்ளது.
கர்ப்பமாக இருந்த காலகட்டத்தில் தம்முடைய பெற்றோர் ஒத்தாசையாக இருக்க முடியாதது கவலை அளித்தது என்று கூறிய திலகவதி, இப்போது தம் மகன் ஒரு வயதாகும் நிலையிலும் அவர்கள் அடிக்கடி வர இயலாத சூழல் நிலவுவதாகக் கூறினார். கிருமிச் சூழலில் சவால்கள் ஏராளமாக இருந்தாலும் குழந்தை பிறந்த பிறகு தங்களின் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரித்திருப்பதாக திலகவதியும் அவரின் கணவரும் பகிர்ந்துகொண்டனர்.
இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ள விரும்புவதாகவும் தம்பதியர் தெரிவித்தனர்.
"ஒரு குழந்தையை வளர்ப்பதன் மூலம் மனிதரின் வளர்ச்சியைப் பற்றி மேலும் அறிய முடிகிறது," என்றார் குழந்தையின் தந்தை கமல்ஜித் சிங், 37.
தொற்றுச் சூழலால் குடும்பத்தில் தள்ளிப்போகும் திட்டங்கள்
சிங்கப்பூரின் மொத்த கருவள விகிதம் (fertility rate) கடந்தாண்டு இதுவரை இல்லா அளவில் குறைந்திருப்பதாக பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். திருமணத்தையும் குழந்தை பெற்றுக்கொள்வதையும் தம்பதிகள் தள்ளிப்போடுவதற்குத் தற்போதைய கிருமிப் பரவல் காரணம் எனச் சுட்டினார் அவர்.
இரண்டாவது பிள்ளையைப் பெற்றுக்கொள்ளும் சிங்கப்பூரர்கள், தங்கள் பிள்ளை மேம்பாட்டு கணக்கிலுள்ள பணத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கும் நிகராக அரசாங்கம் நிரப்பும் அதிகபட்ச தொகையாக 3,000 வெள்ளியிலிருந்து 6,000 வெள்ளி வரை பெறலாம். இது ஜனவரி 1 முதல் பிறக்கும் குழந்தைகளுக்குப் பொருந்தும்.
கிருமிச் சூழலில் கர்ப்பிணிகள் எதிர்நோக்கும் அபாயம்
இதற்கிடையே, கர்ப்பிணிப் பெண்கள் தொடர்ந்து கூடுதல் அபாயத்தை எதிர்நோக்குவதாகக் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவத் துறை இணை பேராசிரியர் ஷெபாலி ஷோரே தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
"ஒரு கர்ப்பிணியின் உடலில் அடிக்கடி மாறும் 'ஹார்மோன்'களால் நோய்த்தடுப்பு சக்தியும் பாதிப்படைகிறது. அந்நிலையில் முகக்கவசத்தை அணிவது மேலும் சிரமமாகிறது," என்று கூறினார். இதனால் சுகாதாரப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவது, அடிக்கடி உடலின் வெப்பநிலையைச் சோதிப்பது போன்றவற்றைக் கர்ப்பிணிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
புதிதாக குழந்தை பெறும் பெற்றோர், குறிப்பாக தாய்மார்களின் மனநிலை எளிதில் பாதிக்கப்படும் பட்சத்தில் கிருமிப் பரவல் சூழல் சில நேரங்களில் சிக்கலை அதிகரிக்கக்கூடும் என்றார்.
உங்கள் வாழ்க்கைத் துணைக்கு ஆறுதலாக இருங்கள்
"மனைவிக்கு இருக்கும் பயத்தைக் கணவரோ கணவருக்கு உள்ள பயத்தை மனைவியோ குறைத்து மதிப்பிடாமல் புரிந்துணர்வுடன் நடந்துகொண்டால் தேவை இல்லாத மன வருத்தம் ஏற்படாது," என்று அவர் கூறினார். புதிதாக பெற்றோராகும் தம்பதியருக்குத் தேவையான வளங்கள் மருத்துவமனைகளிலும் பலதுறை மருந்தகங்களிலும் இருப்பதை அவர் சுட்டினார். இந்நேரத்தில் மனநலத்தைக் காப்பது முக்கியம் என்று வலியுறுத்திய டாக்டர் ஷெஃபாலி, எரிச்சல், மனச்சோர்வு, சோகம் ஆகியவற்றை அதிகளவில் உணரும்போது இதன் தொடர்பிலான உதவியை உடனடியாக நாடும்படி கேட்டுக்கொண்டார்.
"மனநலம் தொடர்பான உதவி நாடுவது என வரும்போது அதைத் தள்ளிப் போடாமல் நம் மீது நாமே அன்பு காட்டும் வழியாக அந்த உதவியைக் கருத வேண்டும்," என்றார் அவர்.
செய்தி: கி. ஜனார்த்தனன்

