எஸ்.வெங்கடேஷ்வரன்
தேசிய அளவில் இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கும் 'முன்னேறு வாலிபா' பாடலைத் தவிர வேறு ஒரு பாடல் வேண்டும் என்று நினைத்தார் உள்ளூர் பாடகரும் இசையமைப்பாளருடான ஷபீர் தபாரெ ஆலம். அந்த எண்ணத்தில் 2012ஆம் ஆண்டு பிறந்த பாடல்தான் 'சிங்கை நாடு' பாடல். நான்காவது முறையாக தேசிய தின அணிவகுப்பில் இவ்வாண்டு கலந்துகொண்ட ஷபீர், முதல்முறையாக நேற்று இப்பாடலைப் படைத்தார்.
தமிழர்கள் மட்டுமல்லாமல் மற்ற இனத்தவரும் ரசிக்கும் பாடலாக 'சிங்கை நாடு' அமையவேண்டும் என்ற நோக்கத்துடன் பாடலை உருவாக்கியதாகக் கூறினார் ஷபீர்.
"நம் தமிழ் இசையே அழகான ஒன்று. அதை இந்தப் பாடல் மூலமாக வெளிப்படுத்த வேண்டும் என்பது எனக்கு முக்கியமாக இருந்தது. முதல்முறை இந்தப் பாடலை எழுதும்போது அழ ஆரம்பித்துவிட்டேன், அது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஒன்பது ஆண்டுகள் கழித்து தேசிய தின அணிவகுப்பில் அந்தப் பாடலைப் பாடும்போது அதை நான் ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்," என்றார் ஷபீர்.
அரசாங்க ஆதரவின்றி தனிப்பட்ட முயற்சியாக உருவான ஷபீரின் இந்தப் பாடலுக்கு, இன்றுவரை பலத்த வரவேற்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும் ஒன்று என்றார் அவர். மேலும், இப்பாடலை அடுத்த ஆண்டு மாணவர்களின் பாடத்திட்டத்தில் இணைக்க, கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் ஷபீர்.
'சிங்கை நாடு' படைப்பு உட்பட இவ்வாண்டு அணிவகுப்பின் முதல் பாடல், அணிவகுப்பின் இறுதி அங்கத்தில் 'தி ரோட் அஹேட்' (The Road Ahead) என்ற கருப் பாடல் ஆகியவற்றிலும் ஈடுபட்டார் திரு ஷபீர்.

