திரு சிவானந்தம் நீலகண்டனின் "கரையும் தார்மீக எல்லைகள்" என்னும் கட்டுரை நூல் இவ்வாண்டின் $2,000 மு கு இராமச்சந்திரா புத்தகப் பரிசைப் பெறுகிறது.
ஆனந்தபவன் உணவக ஆதரவுடன் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் ஆண்டு தோறும் வழங்கி வரும் இந்த புத்தகப் பரிசுத் திட்டத்தின் 12வது ஆண்டுப் பரிசறிவிப்பு விழா கடந்த ஞாயிறு மாலை வலையொளி வாயிலாக இணையத்தில் நடைபெற்றது.
வளர்தமிழ் இயக்கத் தலைவர் திரு. எஸ் மனோகரன் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
2021ஆம் ஆண்டின் புத்தகப் பரிசு தேர்வுக் குழுவில், கணையாழி இதழின் ஆசிரியரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான முனைவர் ம. இராசேந்திரன், மலாயா பல்கலைக்கழகத்தின் மொழி, மொழியியல் புலத் தமிழ்ப் பிரிவின் மூத்த விரிவுரையாளர் முனைவர் மலர்விழி சின்னையா, சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி, இலக்கியத் துறையின் தலைவர் முனைவர் மு. மணிவண்ணன் ஆகியோர் நடுவர்களாகப் பணியாற்றினர்.
இவ்வாண்டு போட்டிக்கு 15 கட்டுரை நூல்கள் வந்திருந்ததாக சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் தெரிவித்தது.
நிகழ்வில் நடுவர்களின் சார்பில் உரையாற்றிய முனைவர் மலர்விழி சின்னையா பரிசுக்குரிய நூலைத் தெரிவு செய்ததற்கான காரணங்களையும் அது மற்ற நூல்களில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதையும் எடுத்துரைத்தார்.

