இர்ஷாத் முஹம்மது
மரினா பே மிதக்கும் மேடையில் பத்து ஆண்டுகளுக்குமுன் தேசிய தின அணிவகுப்பின்போது முதன்முறையாக வான்குடை சாகசம் புரிந்தார் மூத்த வாரண்ட் அதிகாரி மகேஸ்வரன் பிராங்க்ளின் மிராண்டா. அவர் மீண்டும் இவ்வாண்டு மூன்றாவது முறையாக அதே மேடையில் தரையிறங்கினார்.
கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று ஒத்திவைக்கப்பட்ட சிங்கப்பூரின் 56வது தேசிய தின அணிவகுப்பு நடந்தேறியது. அதில் 'ரெட் லயன்ஸ்' எனும் செஞ்சிங்கங்கள் அணியின் ஐந்து சாகச வீரர்களில் ஒருவராக அவர் இடம்பெற்றிருந்தார்.
கிட்டத்தட்ட 5,000 அடி உயரத்தில் விமானத்திலிருந்து குதித்து மரினா பே மிதக்கும் மேடையின் குறுகிய தளத்தில் ஐவரும் ஒருவர்பின் ஒருவராக மிகத் துல்லியமாகக் குதித்ததை, அரங்கில் இருந்த அனைவரும் ஆரவாரத்துடன் கைதட்டி வரவேற்றனர்.
"குறைந்த எண்ணிக்கையில் பார்வையாளர்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்த காட்சி வித்தியாசமாக இருந்தது. இதற்கு முன்னர் 20,000க்கும் மேற்பட்டவர்களுக்குக் கையசைத்த நினைவுகள், என் கண் முன்னே தோன்ற 1,000 பேர் மட்டுமே இருந்த அரங்கில் கையசைத்த அனுபவம் உண்மையில் வித்தியாசம்தான். ஆனால் பல்லாயிரக்கணக்கானோர் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு இருப்பார்கள் என்ற உணர்வும் என்னுள் இருந்தது," என்றார் அவர்.
"நோய்ப் பரவல் சூழலில் இந்த வாய்ப்பு கிடைத்ததற்கும் இதன்மூலம் எத்தனையோ ஆயிரம் மக்களின் உணர்வுகளை மேலோங்க வைக்கும் வாய்ப்பு கிடைத்ததற்கும் மிகுந்த பெருமைப்படுகிறேன்," என்று அவர் குதூகலத்துடன் தெரிவித்தார்.
வழக்கமாக 10,000 அடி உயரத்தில் இருந்து வான்குடையின் உதவியுடன் தரை இறங்கும் ஆற்றல் கொண்டவர்கள் செஞ்சிங்கங்கள்.
தேசிய தினத்தை முன்னிட்டு 2011, 2012 ஆண்டுகளில் சாகசம் புரிந்த திரு மகேஸ்வரன், மீண்டும் இந்த ஆண்டு அரங்கில் மிளிர்வார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதிர்ஷ்டம் மீண்டும் கதவைத் தட்டியதாகவே அவர் நினைக்கிறார். மூன்றாவது முறையாக வாய்ப்பு கிடைத்த செய்தி, அவருக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது.
ஏறக்குறைய 1,550 முறை வானிலிருந்து குதித்துப் பயிற்சி எடுத்துள்ள அவரது வான்குடை சாகசப் பயணம், 2000ஆம் ஆண்டு தொடங்கியது. விடாமுயற்சியுடனும் கட்டுப்பாட்டுடனும் பயிற்சியைத் தொடங்கிய அவர், 2008ஆம் ஆண்டில் செஞ்சிங்கங்கள் அணியில் ஒருவராகத் தகுதிபெற்றார்.
தொடக்கத்தில் தம் தாயார் மிகுந்த அச்சத்துடன் இருந்ததைச் சுட்டிய அவர், தமக்கும் ஒவ்வொரு முறையும் அச்சம் இருக்கத்தான் செய்கிறது என்றார்.
"எந்த மனிதனுக்கும் உயரத்திலிருந்து குதிப்பதற்குப் பயமாகத்தானே இருக்கும். தொடர்ந்து பயிற்சி செய்ததால்தான் தன்னம்பிக்கை அதிகரித்து, திடமாக இருக்க முடிந்தது. எத்தனை முறை குதித்தாலும் பயம் என்பது இருக்கத்தான் செய்யும். ஆனால் அனுபவம் வளர வளர, பயம் குறையும்," என்றார் மகேஸ்வரன்.
குறிப்பாக, பயிற்சியின்போது கற்றதைச் செயல்படுத்துவதில் கவனமாக இருந்தார் அவர்.
விமானத்திலிருந்து குதித்து வானத்தில் கிட்டத்தட்ட 4, 5 நிமிடங்கள் 'ஃப்ரீ ஃபால்' முறையில் நிலத்தை நோக்கி வரும் நேரத்திலும் சிந்தனைக்கு ஓய்வில்லை.
விமானத்தில் இருக்கும்போது வானிலை, காற்றின் திசை, அதன் வேகம் போன்ற தகவல்களெல்லாம் குதிப்பதற்கு முன்னர் அவர்களுக்கு வழங்கப்படும். அந்தக் குழுவினர் தங்களின் தரையிறங்கும் திசை, வரிசை, முறைகளைக் கலந்தாலோசிப்பர்.
அதன் பின்னரே துல்லியமாகத் திட்டமிட்டு தரையிறங்குவர்.
உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது, கட்டுக்கோப்பாக வாழ்வது, தொடர்ந்து முயற்சி செய்வது, துணிச்சலாகவும் உறுதியுடனும் செயல்படுவது, கடமையுணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் திகழ்வது போன்ற நெறிகளைத் தமது வாழ்க்கையின் கோட்பாடுகளாகப் பின்பற்றிவருவதாக திரு மகேஸ்வரன் பகிர்ந்துகொண்டார்.

