'டாக்டர் பரம்' என்று அன்போடு அழைக்கப்படும் நன்யாங் பலதுறை தொழிற்கல்லூரியின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் ராமானுஜம் பரமானந்தம் தமது ஆசிரியர் பயணத்தை 1996இல் தொடங்கினார். 25 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று மருத்துவராகப் பணி புரிந்த காலத்தில், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் அப்பால், அவர்களுடைய உடல் பிரச்சினையைத் தெளிவாக விளக்கி அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
"ஆசிரியராக தற்போது என்னால் ஆயிரக்கணக்கானவர்களுக்கு உதவும் சிறந்த சுகாதாரத் துறை நிபுணர்களை உருவாக்க முடிகிறது. கற்பித்தலில் ஆர்வம் கொண்ட எனக்கு ஆசிரியர் துறை ஏற்றதாக உள்ளது," என்றார் டாக்டர் பரமானந்தம்.
உடற்கூறியல், உடலியல், நோயியல் மற்றும் நோய் இயற்பியல் ஆகிய பாடங்களைத் தாதிமை மாணவர்களுக்கு இவர் கற்றுத் தருகிறார். புதிய மாணவர்களுடன், மேம்பட்ட பட்டயக் கல்வி பெறும் தாதியருக்கும் நிபுணர் களுக்கும் பாடம் எடுக்கிறார்.
தமது முன்னாள் மாணவர்கள், அடுத்தடுத்த ஆண்டுக்குச் சென்ற பிறகும்கூட கேள்விகள் இருந்தால் தம்மை நாடிவருவர் என்று பெருமிதத்துடன் கூறினார் டாக்டர் பரமானந்தம்.
தற்போது தாதியர்களாக உள்ள இவரது மாணவர்கள்கூட பணிசார்ந்த ஐயங்களைத் தீர்த்துக்கொள்ளவும் புதிய தகவல்களைப் பெறவும் இவரை நாடுவார்கள்.
"பாடத்தில் புரியாததைத் தெளிவு படுத்தி, அது இறுதியில் அவர்களுக்கு புரியும்போது அவர்களது முகத்தில் தென்படும் மலர்ச்சிதான் இத்தொழில் எனக்கு கொடுக்கும் மனநிறைவு. இன்றைய மாணவர்களின் வாழ்க்கை பர பரப்பானது. எல்லாவற்றையும்விட தரமான கற்பித்தலையே அவர்கள் வரவேற்கின்றனர். அதனால் பாடத்தின் உள்ளடக்கம் அதிகமாக இருந்தால் அதைப் பாகங்களாகப் பிரித்து புரிந்து கொள்ளக்கூடிய விதத்தில் கற்றுத்தர வேண்டும்." என்றார் அவர்.
வாழ்க்கையில் தமக்கு உந்துசக்தி தருபவர்கள் தமது மாணவர்கள்தான் என்று கூறும் டாக்டர் பரமானந்தம், இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ப தம்மைத் தயார்படுத்திக்கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருவதாகத் தமிழ் முரசிடம் கூறினார்.
இன்றைய மாணவர்கள் தொழில்நுட்பத்தில் அதிக அனுபவமும் அறிவும் கொண்டவர்கள் என்பதால் அவர்களுக்கு ஈடுகொடுத்து தாமும் புதிய தொழில்நுட்ப உத்திகளைப் பயன்படுத்தி, மாணவர்களின் கற்றல் பயணத்தை எளிமையாக்க வேண்டும் என்பது இவரது அடுத்த இலக்கு.

