கறுப்பு வெள்ளை காலந்தொட்டு தமிழ் முரசுடன் இணைந்திருப்பவர்

கி. ஜனார்த்­த­னன்

பல சவால்­க­ளை­யும் வெற்­றி­கொண்டு 85 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக தொடர்ந்து இயங்­கி­வ­ரும் தமிழ் முர­சில் 60 ஆண்டு காலத்­துக்­கும் மேல் பணி­யாற்றி வரும் மூத்த ஊழி­யர் திரு எம். நட­ரா­சன்.

81 வய­தில் இன்­றும் தமிழ் ஊட­கத்­து­றைக்­குப் பங்­காற்­றும் இவர், காலத்­திற்கு ஏற்­ப திறன்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்பவர்.

கணினி யுகத்­திற்கு முன்பு செய்­தித்­தா­ளின் எழுத்­து­கள் ஒவ்­வொன்­றா­க எடுத்­துச் சேர்க்­கப்­படும். சேர்க்­கப்­பட்ட எழுத்­து­கள் பக்­கங்­க­ளாக வடி­வ­மைக்­கப்­படும்.

தமிழ் முரசு நிறு­வ­னத்­தில் 18 வய­தில் இப்­படி எழுத்­து­க­ளைக் கோக்­கும் பணி­யைத் தொடங்­கிய திரு நட­ரா­சன், பக்க வடி­வ­மைப்­பா­ள­ராக, மேற்­பார்­வை­யா­ள­ராக, கணி­னி­யில் அச்­சேற்­றிய செய்­தி­களை வெட்டி ஒட்டி பக்­கங்­கள் தயா­ரிப்­ப­வ­ராக, கணி­னி­யில் செய்­தி­களை அச்­சேற்­று­ப­வ­ராக, விளம்­ப­ரங்­களை வடி­வ­மைப்­ப­வ­ராக, விளம்­ப­ரச் செய்­தி­களை எழு­து­ப­வ­ராக செய்­தி­க­ளைத் திருத்தி பக்­கம் வடி­வ­மைக்­கும் துணை­யா­சி­ரி­ய­ராக, பல்­வேறு பணிக­ளைப் புரிந்து ஓய்வு பெற்ற பின்னர், திருத்­தா­ள­ராக இன்­று­வ­ரை­யில் தொடர்ந்து தமிழ் முர­சுக்கு சேவை­யாற்­றும் நீண்டகால ஊழியர்.

தொடக்­க காலத்­தில்..

தமி­ழ­கத்­தின் புதுக்­கோட்டை மாவட்­டம், தேவர்பட்டி, சிலட்டூர் கிரா­மத்­தில் பிறந்த திரு நட­ரா­சன், இரு தம்­பி­கள், ஒரு தங்­கை­யு­டன் வளர்ந்­தார். எட்­டாம் வகுப்பு வரை படித்த இவர், தமது ஊர் மக்­கள் பல­ரை­யும் பின்­பற்றி பிழைப்­பு தேடி சிங்­கப்­பூ­ருக்கு வந்­தார். 1955ஆம் ஆண்­டில் 15 வய­தில், ரஜுலா கப்­ப­லில் மலே­சி­யா­வின் பினாங்கு நகரை அடைந்து பின் கார் மூலமாக சிங்­கப்­பூர் வந்­தார். சாதா­ரண கூலி வேலை­யைச் செய்­வ­தை­விட ஒரு கைத்­தொ­ழி­லைக் கற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று அச்­சுக்­கோப்­பா­ள­ராக சம்­ப­ளம் இல்­லா­மல் ஐந்து மாதங்­கள் பயிற்சி பெற்­றார். அந்­தக் காலத்­தில் இந்த வேலைக்­குப் போட்டி அதி­கம். எனி­னும், வேலைத் திற­னும் உறு­தி­யும் மிக்க திரு நட­ரா­சனுக்கு பயிற்சி முடிந்­த­துமே வேலை கிடைத்­தது. இடை­யில், தந்தை இறந்­து­விட குடும்­பப் பொறுப்பை முழு­மை­யா­கச் சுமக்க வேண்டி வந்­தது. 1958ல் தமிழ் முரசு பத்­தி­ரி­கை­யில் வேலைக்­குச் சேர்ந்­தார்.

தொடக்­கத்­தில் லாவண்­டர் ஸ்தி­ரீட்­டில் அமைந்­தி­ருந்த தமிழ் முரசு அலு­வ­ல­கம், பின்­னர் ஜெண்­டிங் லேன், கம்­போங் அம்­பாட், சின் சுவீ ரோடு, அதன் பின்­னர் மீண்­டும் ஜெண்டிங் லேனுக்கு மாறி தற்­போது தோ பாயோ­வி­லுள்ள எஸ்­பி­எச் அலு­வ­ல­கத்­தில் செயல்­பட்டு வரு­கிறது. இந்த அலு­வ­ல­கங்­கள் அத்­த­னை­யி­லும் பணி­யாற்­றிய பழுத்த அனு­ப­வம் திரு நட­ரா­சனுக்கு உண்டு.

தமி­ழ­வேள் கோ.சாரங்­க­பாணி

"வெள்ளை வேட்டி, சட்­டை­யில் நெடி­ய, உயர்ந்த, மிடுக்­கான தோற்­றம், கம்­பீ­ர­மான நடை, உறு­தி­யான பேச்சு. தமி­ழ­வேள் கோ சாரங்­க­பா­ணி­யைப் பார்க்­கும்­போது, ஓர் அர­சி­யல் தலை­வ­ரைப்­போ­லவே இருப்­பார். தமிழ் வளர்ச்­சிக்­காக பாடு­பட்ட திரு சாரங்­க­பாணி, சிறந்த தலை­வ­ரா­க­வும் தோழ­ரா­க­வும் இருந்­த­வர். செய்­தி­யா­ளர்­க­ளை­யும் எழுத்­தா­ளர்­க­ளை­யும் ஆத­ரித்து வளர்த்­த­வர். அமை­தி­யாக, நிதா­ன­மாக, சமூக அக்­க­றை­யு­டன் செயல்­பட்ட தலை­வர். அவ­ருக்கு ஈடான தமிழ்த் தலை­வர் எவ­ரு­மில்லை," என்றார் திரு நடராசன்.

அச்­சுக்­கோக்­கும் பணி பற்றி..

அந்­தக் காலத்­தில் அச்­சுக்­கோப்பு என்­பது கடு­மை­யான வேலை. நின்­ற­ப­டியே பல மணி நேரம் வேலை செய்­ய­வேண்­டும். இந்த வேலையை சிங்­கப்­பூ­ரில் உள்­ள­வர்­கள் செய்­யத் தயங்­கி­ய­தால் இந்­தி­யா­வி­லி­ருந்து ஆட்­கள் வர­வ­ழைக்­கப்­பட்­ட­னர்.

அச்­சுக்­கோப்பு கடி­ன­மான வேலை என்­றால் அதை­விட கடி­ன­மா­னது, பக்­கங்­களை அமைப்­பது. சின்­ன சின்ன எழுத்­து­கள் கொட்டி விட்­டால் மீண்­டும் அவற்­றைக் கொத்து செய்­தி­யாக்­கு­வது எளி­தான செயலல்ல. பக்­கங்­களில் தலைப்பு, செய்தி, படம் போன்­ற­வற்­றைத் தகுந்த இடங்­களில் பொருத்­தும் பணியை மிக­வும் கவ­ன­மா­கச் செய்ய வேண்­டும்.

'லெகோ' துண்­டு­களை அடுக்­கு­வ­து­போல சின்­னஞ்­சி­றிய எழுத்­து­களை அடுக்­கிச் செய்­யும் அந்­தப் பக்­கங்­களை, கணி­னி­யில் வடி­வ­மைப்­பது போல் விரும்­பி­ய­படி மாற்ற முடி­யாது. அளந்து அளந்து செய்ய வேண்­டும். அத­னால் முதல் முறையே மிகச் சரி­யாக செய்து விட வேண்­டும். செய்­யும் வேலை­யின் அள­வைப் பொறுத்­து­தான் அப்­போது சம்­ப­ளம் கொடுப்­பா­ளர்­கள். அதா­வது, எவ்­வ­ளவு அச்­சுக்­கோத்­தோமோ அதை அளந்து, ஒரு பத்தி, ஓர் அங்குலத்திற்கு 10 காசு என்று சம்­ப­ளம் கொடுப்­பார்­கள்.

அச்­சுக்­கோப்­பா­ளர்­க­ளின் கைகளில் படி­யும் மையை மண்­ணெண்­ணெய் போட்­டுத் துடைத்­தால்­தான் போகும். தமிழ் முர­சின் முன்­னாள் ஆசி­ரி­யர் திரு வை. திரு­நா­வுக்­க­ரசு மேற்­கொண்ட முயற்­சி­யால் அச்­சுக்­கோப்பு முறை­யி­ல் இ­ருந்து தமிழ் முரசு கணி­னி­ம­ய­மா­னது. புதிய தொழில்­நுட்­பத்­தில் வடி­வ­மைப்பு, தரம் எல்­லாமே மேம்­பட்­டது. பக்­கங்­கள் வண்­ண­ம­ய­மா­கின.

நல்ல நண்பர்..

திரு நடராசன் பழ­கு­வ­தற்கு இனி­மை­யான மனி­தர் என்று அவ­ரு­டன் வேலை செய்த பல்­லாண்டு கால நண்­ப­ரான அச்­சுக்­கோப்­பா­ளர் திரு அருள்­ராஜு செபெஸ்­டி­யன், 73, கூறி­னார்.

"1968ல் நான் வேலை­யில் சேர்ந்­தேன். தொடக்­கத்­தி­ல் இ­ருந்தே அவ­ரு­டன் எனக்­குப் பழக்­கம். எங்கள் நட்பு 50 ஆண்­டு­க­ளுக்கு மேல் தொடர்ந்தது. ஒரு­வ­ருக்கு ஒரு­வர் உதவி செய்­வோம்," என்­றார் திரு அருள்ராஜு.

திரு நடராசன் வேலை­யி­டத்­தில் அமை­தி­யா­ன­வ­ராக இருந்­தா­லும் அன்­பா­கப் பேசி, அறி­வு­ரை­களும் கூறு­வ­தாக தமிழ் முர­சில் துணை ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­றும் நரேந்­தி­ரன் நாரா­ய­ண­சாமி தெரி­வித்­தார்.

1963ல் சம்­பள உயர்வு வேண்டி தமிழ் முரசு ஊழி­யர்­கள் வேலை­நிறுத்­தம் செய்­த­போது பத்­தி­ரிகை தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டது. அப்­போ­தைய துணை ஆசி­ரி­யர்

செல்­வ­க­ண­பதி, டாக்­டர் ராம­சாமி என்­ப­வ­ரின் ஆத­ர­வு­டன் தமிழ் மலர் பத்­தி­ரி­கையை ஆரம்­பித்­தார். அப்­போது அச்­சுக்­கோப்­பா­ளர்­கள் உட்­பட முர­சின் ஊழி­யர்­கள் பல­ரும் அங்கு சேர்ந்­த­னர். அந்த வாய்ப்பு கிடைத்­த­போ­தும் நட­ரா­சன் அதனை ஏற்க விரும்­ப­வில்லை.

"டைம்ஸ் பத்­தி­ரி­கை­யில் செல்வ­க­ண­பதி வெளி­யிட்­டி­ருந்த விளம்­ப­ரத்­தின் வழி­யா­கத்­தான் அதைப் பற்றித் தெரிந்­து­கொண்­டோம். அவ­ரின் செயல் எனக்­குப் பிடிக்­க­வில்லை. அவ­ரது செய­லால் சாரங்­க­பா­ணி­யும் வருத்­த­ம­டைந்­தார். ஆயி­னும், இறு­தி­யில் தமி­ழ­வேள் மீண்­டும் இப்­பத்­தி­ரி­கை­யைத் தொடங்­கி­னார்," என்று கூறி­னார்.

திரு சாரங்­க­பா­ணிக்­குப் பிறகு தமிழ் முரசு பத்­தி­ரி­கையை நடத்தி வந்த அவர் மகன்­க­ளின் நிர்­வா­கத்­தால் அதன் நிதி­நி­லைமை வலு­வி­ழந்­த­தா­கக் குறிப்­பிட்ட திரு நட­ரா­சன், அப்­போது ஊதி­யம் வரு­வதற்­குத் தாம­த­மா­கும் என்றார்.

ஆயி­னும், தமது வேலை மீதான நேசத்­தால் பணத்தைப் பெரி­து­படுத்­தா­மல் தொடர்ந்து உழைத்­தார். தொழில்­நுட்ப வளர்ச்­சி­யின் உதவி­யு­டன் இன்று செய்­தித்­தாள் பார்ப்­ப­தற்­குக் கவர்ச்­சி­யாக இருந்­தா­லும் ஆர்­வத்­து­டன் பத்­தி­ரிகையை நாடும் வாச­கர்­கள் குறைந்து வரு­வது இவரை வருந்த வைக்­கிறது.

செய்­தித்­தாள் படிக்­கும், தமிழில் வாசிக்­கும் கலா­சா­ரம் காலப்­போக்­கில் குறைந்து வரு­கிறது என்ற இவர், வாசிப்­புப் பழக்­கம் தொடர்ந்து இளை­யர்­க­ளி­டையே ஊக்­கு­விக்­கப்­பட வேண்­டும் என்­றார்.

22 வய­தில் மணம் புரிந்த திரு நட­ரா­சனுக்கு, இரு மகன்­கள், ஒரு மகள் உள்­ள­னர். ஏறக்­கு­றைய 68 ஆண்­டு­கள் சிங்­கப்­பூ­ரில் வாழ்ந்த திரு நட­ராசன், அண்­மை­யில் தமி­ழ­கம் திரும்­பி­னார். நீண்ட காலம் வாழ்ந்த மண்­ணை­விட்டுப் பிரி­வது வருத்­த­மாக இருந்­தா­லும், வய­தான காலத்­தில் மக­ளு­டன், பிறந்த மண்­ணில் வாழ விரும்பி இந்த முடிவை எடுத்­துள்­ளார்.

"எங்கு போனா­லும் தமிழ் முர­சைப் பிரிய முடி­யாது என்­ப­தால், தொடர்ந்து திருத்­தா­ளராக வேலை­பார்ப்­பேன்," என்­றார் தமிழ் முர­சின் நான்கு தலை­முறை ஊழி­யர்­க­ளுக்கு ஊக்­க­சக்­தி­யா­கத் திக­ழும் மூத்த ஊழி­யர் திரு நட­ரா­சன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!