நவராத்திரி விழாவை முன்னிட்டு புதிதாக நிறுவப்பட்ட அமைப்பான ஞானானந்தம் மிஷன் சிங்கப்பூர் கிளை, மொத்தம் 80 அன்பளிப்புப் பைகளைப் பாதிப்புக்குள்ளான மகளிர் மற்றும் சிறாருக்கு வழங்கியுள்ளது.
'கிரியா சக்தி' என்ற திட்டத்தின்வழி குடும்ப வன்முறை அல்லது ஆதரவற்ற 57 மகளிருக்கும் 29 குழந்தைகளுக்கும் தினசரி தேவை பொருட்களான, சவர்க்காரம், நகப்பூச்சு, தின்பண்டங்கள், பானங்கள் போன்றவற்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளது இவ்வமைப்பு. தன்னம்பிக்கை மற்றும் நம்பிக்கை அளிக்க, பெண் மகிமையைப் போற்றும் விதமாக ஒன்பது இரவுகளுக்குக் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி விழாவை மையமாகக்கொண்டு, ஞானானந்தம் 'மிஷன்' இந்த அன்பளிப்புப் பைகளை வழங்கியதாக அமைப்பு தெரிவித்தது.
'அங்கிலிக்கன்' குடும்ப நிலையம், வெளிநாட்டு ஊழியர் சமூக ஆதரவு மற்றும் பயிற்சிக்கான அமைப்பு (FAST), மகளிர்க்கான சிங்கப்பூர் மன்றம்(SCWO) ஆகிய சேவை வழங்கும் அமைப்புகளின் மூலம் ஆதரவற்ற பெண்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கும் அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டுள்ளன.
மகளிர், குழந்தைகள் மட்டுமின்றி, முதியவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஊனமுற்றோர் உட்பட பொதுவாக சமுதாயத்தில் அதிகக் குரல் இல்லாதவர்கள் அனைவருக்கும் ஆதரவு வழங்குவது மட்டுமல்லாது, உதவி பெறுவோரின் நலனில் அக்கறை செலுத்தி, பலனடைந்தவர்களே தொண்டு செய்யும் வகையில் ஊக்கமளிப்பது இந்நிறுவனத்தின் சிறப்புத் தன்மை.
ஸ்ரீ ஞானானந்த கிரி பீடத்தின் தொண்டு செய்யும் பிரிவான ஞானானந்தம் மிஷன், இந்தியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா என பல நாடுகளில் கால்தடங்களைப் பதித்து பல சேவைகள் செய்துகொண்டு வருகின்றது. மேன்மேலும், தனது முயற்சிகள் இன்னும் பல நாடுகளையும் மக்களையும் சேரவேண்டும் என்ற நோக்கத்துடனும் முனைப்புடனும் இந்த அமைப்பு விளங்குகிறது.
உலகளாவிய குரு பீடமாக, பல சேவைகள் செய்து வரும் ஸ்ரீ ஞானானந்த கிரி பீடத்தின் பீடாதிபதியான பூஜ்யஸ்ரீ நிரஞ்சனானந்தகிரி சுவாமிகளின் வழிகாட்டுதலின் மூலம் இயங்கி வரும் அமைப்புதான் ஞானானந்தம் 'மிஷன்'. ஆன்மீக வழிகாட்டுதல், கலாச்சார மேம்பாடு மற்றும் சமூகநல சேவைகளை அடிப்படைக் கூறாகக் கொண்டு, உலகளாவிய நிலையில் பற்பல தொண்டுகளும் சேவைகளும் செய்து வரும் ஸ்ரீ ஞானானந்த கிரி பீடத்தின் கீழே இயங்கும் சிங்கப்பூர் கிளையே இந்த 'மிஷன்'. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து மும்முரமாக சமூக மேம்பாட்டுத் தொண்டுகளில் ஈடுபட்டு வருகிறது இந்த அமைப்பு.
"இறைவனின் அன்பையும் கருணையையும் பிரதிபலிக்கவே படைப்பின் ஒவ்வொரு ஜீவராசியும் பிறந்துள்ளோம். எனவே, எந்த தருணத்தில் எல்லாம் ஒருவர் தன்னலமின்றி பிறருக்கு சேவை செய்கிறாரோ, அந்த செயல் இறைவனிடமிருந்து பிறக்கிறது. ஞானானந்தம் மிஷன் சிங்கப்பூர் கிளை அதன் செயல்பாட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் இதை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்களுக்கு உதவும் இந்த முயற்சி, இவ்வுலகின் அன்னையான பராசக்தியை கெளரவிப்பதற்கு ஒப்பானது. கடவுள் பக்தி பல வடிவங்களை எடுக்கலாம். ஆனால், கடவுளின் படைப்பில் அனைவருக்கும் சேவை செய்து, அதன் மூலம், நம்முடைய எதிர்மறையான குணங்களிலிருந்து விடுபட்டு, தாழ்மையுடன் இருக்கக் கற்றுக்கொண்டு, அனைவரையும் சமத்துவமாக ஏற்றுக்கொள்வதே, இறைவனுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய வழிபாடு. சிங்கப்பூர் மக்களுக்கும், உலக மக்களுக்கும் தன்னலமின்றி சேவை செய்ய, இதுபோன்ற பல முயற்சிகளுடன் இந்த அமைப்பு தனது பயணத்தைத் தொடர, எனது குரு பரமஹம்ச பரிவ்ராஜகச்சார்யா ஜகத்குரு ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் ஆசிர்வதிக்கட்டும்." என்று கூறிய ஸ்ரீ நிரஞ்சனானந்த கிரி சுவாமிகள், "ஆதரவின்றி தவிப்பவர்களுக்கு நாம் உதவி செய்யத் தயாராக இருக்கிறோம்," என்றும் கூறினார்.
"வேறுபாடுகளின்றி, சிறுமைப்பாடுகளை ஒழித்து, எல்லோரையும் ஒருங்கிணைக்கும் ஒரு பாலமாக, சிங்கப்பூரில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் பொதுவாக இருந்து பல சேவைகளைச் செய்யவேண்டும் என்பதே எங்கள் அமைப்பின் முக்கிய நோக்கம்" என்று கூறினார் ஞானானந்தம் மிஷன் சிங்கப்பூர் கிளையின் இயக்குனர்களில் ஒருவரான டாக்டர் சகாயநாதன்.
கொவிட்-19 கிருமித்தொற்று சூழலால், பல மக்கள் அவதிப்படுவதை உணரும் ஞானானந்தம் மிஷன் அமைப்பு, அடுத்த சில மாதங்களுக்குத், தனிமையில் வாழும் மக்களுக்கு உணவு மற்றும் தேவையான பொருட்களை வழங்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. தீபாவளி, கிறிஸ்மஸ் போன்ற விழாக்கள் வருவதனால், உதவி தேவைப்படும் மக்கள் மனநிம்மதியுடனும் சந்தோஷத்துடனும் கொண்டாடுவதற்குத் தனது உதவியை எவ்வகையில் அளிக்கலாம் என்ற திட்டத்தையும் தீட்டிவருவதாக அமைப்பு தெரிவித்தது.