சிங்கப்பூரில் 5% பெரியவர்களுக்கும்
20% சிறாருக்கும் ஆஸ்துமா உள்ளதாக அண்மைய புள்ளிவிவரங்கள் காட்டியுள்ளன. உறிஞ்சி (இன்ஹேலர்) பயன்பாடு அதிகரித்து
உள்ளதால் ஆஸ்துமாவால் நேரும் உயிரிழப்புகள்
கடந்த பத்தாண்டில் குறைந்துள்ளன. இருப்பினும்,
சரியான உறிஞ்சியை முறையாக பயன்படுத்தாத நிலையில் அது ஆஸ்துமா தாக்குதலுக்கும் மரணத்திற்கும் இட்டுச் செல்லலாம். அவ்வாறு மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிய ஆஸ்துமா நோயாளி ஒருவரை தமிழ் முரசு சந்தித்துப் பேசியது.
ப. பாலசுப்பிரமணியம்
விடிய விடிய இசைக் கச்சேரியில் மூழ்கிவிடுபவர்தான் இசைக்கருவிகளை வாசிக்கும் கலைஞர் திரு மெய்யழகன் கந்தசாமி. 47 வயதில் இவருக்கு முதல் ஆஸ்துமா தாக்குதல் ஏற்பட்டது. சுவாசிக்க உதவும் 'வென்டிலேட்டர்' கருவி பொருத்தப்பட்டு சில நாட்கள் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
வீடு திரும்பும்போது, 'பிரிவென்டர் இன்ஹேலர்' எனும் உறிஞ்சியும் மற்ற மருந்துகளும் இவருக்குப் பரிந்துரைக்கப்பட்டன. ஆனால் அவர் அவற்றைப் பயன்படுத்தவில்லை.
தமக்கு நேர்ந்த ஆஸ்துமா தாக்குதல், ஒருமுறை மட்டுமே வந்ததெனக் கருதி, ஆஸ்துமா தாக்குதலுக்குப் பிறகு வேறு மருத்துவப் பரிசோதனைகளுக்கு அவர் செல்லவில்லை.
அவர் குடும்பத்தில் அவருடைய தாயாருக்கு ஆஸ்துமா நோய் இருக்கிறது. எப்போதெல்லாம் திரு மெய்யழகனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதோ அப்போதெல்லாம் தாயாரின் 'ரிலீவர் இன்ஹேலர்' எனும் நிவாரண உறிஞ்சியை அவர் பயன்படுத்தினார்.
இந்த வழக்கம் சில ஆண்டுகளுக்கு நீடித்தது. திரு மெய்யழகனுக்குப் புகைபிடிக்கும் பழக்கமும் இருந்தது.
நாளடைவில் இந்த அலட்சியப்போக்கு ஆபத்தில் கொண்டுபோய்விட்டது. 2016ஆம் ஆண்டில், மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
மறுபடியும் 'வென்டிலேட்டர்' கருவியின் உதவியுடன் சுவாசித்து, பின்னர் உயிர் காப்பு அமைப்பு ஆதரவில் தம் உயிரைக் கையில் பிடித்திருந்தார்.
மீண்டும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்தச் சம்பவம் நடந்த பிறகு, அவர் பாடம் கற்றுக்கொண்டார். புகைபிடிப்பதைக் கைவிட்டார்.
பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை முறையாக உட்கொள்ள தொடங்கினார். இரவு வேளையில் இசைக் கச்சேரிகளில் ஈடுபடுவதை நிறுத்திக்கொண்டார்.
ஆரோக்கிய வாழ்க்கைமுறையை அன்றிலிருந்து கடைப்பிடித்து வருவதாகக் கூறினார் 55 வயது திரு மெய்யழகன். ஆஸ்துமா தாக்குதல் வந்த பிறகு மருந்து நாடும் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்றார் அவர்.
ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த தடுப்பு ஆஸ்துமா இன்ஹேலரை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் நிவாரண உறிஞ்சியை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் விளக்கினார்.