அண்மையில் 'ரிலீவர் இன்ஹேலர்' எனும் நிவாரண உறிஞ்சியை அதிகம் நம்பியிருப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றிய காணொளி ஒன்று வெளியிடப்பட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் இக்காணொளியில் உள்ளூர் பிரபலங்கள் சிலர் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.
சிங்கப்பூர் ஆஸ்துமா, ஒவ்வாமை சங்கம் (ஏஏஏ) மற்றும் ஆஸ்திரஸெனிகா நிறுவனம் வழிநடத்தும் ஆரோக்கிய நுரையீரல் திட்டம் இரண்டும் இணைந்து இக்காணொளியை வெளியிட்டு இருந்தன.
காணொளி வழி ஆஸ்துமா நோயாளிகளில் மேலும் பலர், தங்களின் நிவாரண உறிஞ்சியின் பயன்பாட்டை உணர்ந்து தகுந்த நடவடிக்கை எடுப்பர் எனத் தாம் நம்புவதாக ஏஏஏ தலைவர் டாக்டர் ஏட்ரியன் சான் கூறினார்.
மூன்றில் இரண்டு ஆஸ்துமா நோயாளிகள், தங்களின் பிரச்சினையைச் சமாளிக்க நிவாரண உறிஞ்சிதான் சிறந்த வழி என்று கருதுவதை அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளதாக டாக்டர் சான் குறிப்பிட்டார்.
ஆஸ்துமாவைச் சமாளிக்கத் தங்களின் மருத்துவரிடமிருந்து கூடுதல் ஆதரவையும் தகவலையும் எதிர்பார்ப்பதாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 32 விழுக்காட்டினர் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே கொவிட்-19 காலகட்டத்தில் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள், மருத்துவ ஆலோசனைப்படி மருந்துகளை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
நிவாரண உறிஞ்சியை நீங்கள் அதிகம் நம்பியிருப்பதாக உணர்ந்தால் https://www.rateyourreliance.sg/ என்ற இணையப்பக்கத்தில் உள்ள கருத்தாய்வில் பங்கேற்கலாம். அதன் முடிவுகளை உங்களின் மருத்துவருடன் பகிர்ந்துகொண்டு ஆலோசனை பெறலாம்.