ஆஸ்துமா நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க ஆஸ்துமா தாக்குதலை ஏற்படுத்தும் நடவடிக்கைகளைத் தவிர்ப்பது, ஆரோக்கிய வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பது, உறிஞ்சியைப் பயன்படுத்துவது ஆகியவை முக்கியம். முதல்முறை மருத்துவரை ஓர் ஆஸ்துமா நோயாளி சந்திக்கும்போது தகுந்த சிகிச்சைகள் அவருக்குப் பரிந்துரைக்கப்படும். உறிஞ்சியை முறையாகப் பயன்படுத்துவது குறித்தும் கற்றுக்கொடுக்கப்படும்.
கட்டுப்படுத்தாவிட்டால்..
ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் மூச்சிழுப்பு, மூச்சுத்திணறல், நெஞ்சுப் பகுதியில் இறுக்கம், இருமல் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும். அது மேலும் கடுமையான ஆஸ்துமா தாக்குதலுக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கும் ஏன் மரணத்திற்கும்கூட இட்டுச் செல்லலாம்.
இன்ஹேலர்களிடையே
உள்ள வேறுபாடு..
'பிரிவென்டர் இன்ஹேலர்' எனும் தடுப்பு ஆஸ்துமா உறிஞ்சி, பாதிப்படைந்த நுரையீரலின் காற்று வழிகளை ஸ்டீராய்டு பயன்பாட்டின் வழி சரிசெய்ய உதவுகிறது. உள்ளிழுக்கப்படும் ஸ்டீராய்டு நேரடியாக காற்று வழிகளுக்கு செல்வதால் இது பாதுகாப்பான முறையாக கருதப்படுகிறது.
'ரிலீவர் இன்ஹேலர்' எனும் நிவாரண உறிஞ்சி, காற்று வழிகளைத் திறந்திடச் செய்து மூச்சுத் திணறல் போன்ற ஆஸ்துமா அறிகுறிகளுக்கு உடனடி நிவாரணம் தருகிறது.
ஆனால் பாதிக்கப்பட்ட காற்று வழிகளைச் சரிசெய்வதற்கான தன்மை அதற்கு இல்லை.
இதைப் பயன்படுத்துவதாக இருந்தால் தடுப்பு ஆஸ்துமா உறிஞ்சியுடன் சேர்த்துப் பயன்படுத்துவது சிறந்தது. ஏனெனில் உடலில் ஸ்டீராய்டு அதன் வேலையைச் செய்ய, இது ஆஸ்துமா அறிகுறிக்கு நிவாரணம் தருகிறது.
நிவாரண உறிஞ்சி
மட்டும் போதாது..
நிவாரண உறிஞ்சியைப் பயன்படுத்தும்போது நோயாளிகளுக்கு உடனடி நிவாரணம் கிடைப்பதால் ஆஸ்துமா கட்டுக்குள் இருப்பதாகத் தவறான எண்ணத்தை ஒருவருக்கு அது தந்துவிடுகிறது.
நிவாரண உறிஞ்சியை மட்டுமே அடிக்கடி பயன்படுத்துவதால் மோசமடைந்துவரும் ஆஸ்துமா பிரச்சினையை அது மூடி மறைப்பதுடன் கடுமையான ஆஸ்துமா தாக்குதலுக்கும் அது நாளடைவில் வழிவிடலாம்.
ஆஸ்துமா நோயாளிகள் பெரும்பாலும் தடுப்பு ஆஸ்துமா உறிஞ்சியைப் பயன்படுத்தியவாறு இந்த நிவாரண உறிஞ்சியையும் உபயோகிக்கலாம்.
நிவாரண உறிஞ்சியின்
பயன்பாட்டைக் குறைக்க..
நிவாரண உறிஞ்சியை வாரத்தில் மூன்று அல்லது அதற்கும் அதிக முறை பயன்படுத்துவது, ஆஸ்துமாவை முறையாகக் கட்டுப்படுத்துவதாகாது. முடிந்தவரை தடுப்பு ஆஸ்துமா உறிஞ்சியைப் பயன்படுத்தி ஆஸ்துமாவைக் கட்டுக்குள் வைத்திருக்க முயல வேண்டும்.