'விடிஎல்' எனப்படும் தடுப்பூசி போட்டோருக்கான பயணத்தடத் திட்டம் இந்தியாவிற்கும் நீட்டிக்கப்படும் என்பது லிட்டில் இந்தியா வட்டாரத்தில் இயங்கிவரும் பயண முகவர்களுக்கு நம்பிக்கை தரும் நற்செய்தியாகவே அமைந்துள்ளது.
குறிப்பாக, சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோருக்கும் இந்தியாவிலிருந்து இங்கு வருவோருக்கும் உள்ள பயண ஏற்பாடுகளைச் செய்துவந்தவர்களின் வாழ்வாதாரம் மீண்டும் சீராகும் என்ற நிம்மதி பிறந்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் ரங்கூன் ஏர் டிராவல் நிறுவனம், 'தேக்கா பிளேஸ்' (முந்திய 'தி வெர்ஜ்') கட்டடத்தில் அடியெடுத்து வைத்த சில மாதங்
களிலேயே கொரோனா கிருமிப் பரவல் தொடங்கியது. அதனால் வர்த்தகம் முடங்கியது.
கடந்த ஆண்டு கிருமிப் பரவல் தலைதூக்கியது முதல் இம்மாதம் இறுதிவரை அவர்கள் தங்கள் அலுவலகத்தைத் தற்காலிகமாக மூடிவிட்டனர்.
ஏற்கெனவே டிசம்பர் மாதம் முதல் அலுவலகத்திலிருந்து செயல்படலாம் என்ற திட்டத்தில் இருந்த அவர்களுக்கு, இந்தியா வுக்கு 'விடிஎல்' திட்டம் தொடங்கவிருப்பது வரவேற்கத்தக்க அம்சமாக உள்ளது.
"இன்றைய சூழலில் இங்கிருந்து இந்தியா செல்ல அதிக தேவை இருக்கிறது. ஆனால் விமானச் சேவைகளுக்குத்தான் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது," என்றார் ரங்கூன் ஏர் டிராவல் நிறுவனத்தின் இயக்குநர் திரு ஜகபர் சாதிக், 37.
"'விடிஎல்' திட்டம் தொடங்கியதும் சிங்கப்பூர்-இந்தியா விமானப் போக்குவரத்தால் இருவழிகளிலும் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வந்து போவார்கள்.
"நம் பொருளியலுக்கு அது நன்மை அளிக்கும். அதே நேரத்தில், 'விடிஎல்' திட்டத்தால் நீண்ட காலமாகத் தொய்வடைந்த சுற்றுலாத் துறைக்கே இத்திட்டம் புத்துயிர் அளிக்கும்," என்றார் திரு சாதிக்.
'விடிஎல்' திட்டத்தின்கீழ் இயங்கும் விமானச் சேவைகள் குறித்த அட்டவணை இன்னும் வெளிவரவில்லை. விரைவில் வரும் என்ற எதிர்பார்ப்பில் பயணிகளும் முகவர்களும் உள்ளனர்.
'விடிஎல்' திட்டம் தவிர்த்து, நோய்ப் பரவல் காலத்திற்கு முந்திய காலம்போல மீண்டும் பயணிகள் விமானச் சேவைகளை சிங்கப்பூர்-இந்தியா இடையில் தடையின்றி இயக்க இருநாட்டு அரசாங்கங்களும் முயற்சி எடுக்கவேண்டும் என்று பல பயணச் சேவை முகவர்கள் விரும்புகின்றனர்.
அத்துடன், திருச்சி விமான நிலையத்திற்கு 'விடிஎல்' சேவை இயக்கப்பட்டால் பெரும் வரவேற்பை பெரும் என்பது 'தஞ்சை டிராவல் அண்ட் டூர்ஸ்' நிறுவனத்தின் திரு அப்துல் காதரின் கருத்து.
நோய்ப் பரவல் சூழலுக்கு முந்திய காலத்திலும் திருச்சிக்கு அதிக எண்ணிக்கையில் பயணிகள் வந்து சென்றுகொண்டிருந்தனர் என்றார் 'பேரடைஸ் டூர்ஸ்' நிறு வனத்தின் உரிமையாளர் திரு சிராஜ்.
"வெளிநாட்டு ஊழியர்கள், பணிப்பெண்கள் பெரும்பாலும் திருச்சி அருகே உள்ள நகரங்களைச் சேர்ந்தவர்கள். அத்துடன் பல சுற்றுலாத்தலங்கள் அப்பகுதியைச் சுற்றி உள்ளதால் சிங்கப்பூரர்களும் அவ்வழியே பயணம் செய்கிறார்கள். 'விடிஎல்' திட்டம் அங்கும் வந்தால் சிறப்பு," என்றார் அவர்.