அவாண்ட் நாடகக்குழு அதன் 20வது ஆண்டு நிறைவை ஒட்டி புதிதாக 'அவாண்ட் நாடகத்துறை விருதுகளை' வழங்குகிறது. சிங்கப்பூர் தமிழ் மேடை நாடகத்துறையில் பங்களித்துள்ள படைப்பாளிகளுக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. நாடக எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், மேடைக்குப் பின்னால் இயங்கும் இசை, உடை அரங்க அமைப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், ஆதரவாளர்கள் என ஒரு நாடகம் மேடையேறுவதில் முக்கிய பங்கு வகிப்போரில் சிலருக்கு இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. அவாண்ட் நாடக விருதுகளைப் பெறுவோர், மேன்மேலும் சாதிக்கும் ஊக்கம் பெறுவர் எனத் தாம் நம்புவதாக நாடகக்குழுவின் தலைவர் ஜி.செல்வா கூறினார்.
முத்தமிழ் கலைகளில் ஒன்றான நாடகக் கலையைக் கடந்த பல ஆண்டுகளாக சிங்கப்பூரில் வளர்த்துவரும் அவாண்ட் நாடக்குழுவிற்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார் தமிழ் முரசின் செய்தி ஆசிரியரும் மின்னிலக்க ஆசிரியருமான திரு தமிழவேல்.
"தமிழையும் தமிழர்களையும் கலைஞர்களையும் பரைசாற்றி வரும் தமிழ் முரசின் பணியைப் பரைசாற்றி வழங்கிய விருதுக்கு நன்றி.
"சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழ் தமிழ் முரசு. உலகின் ஆகப் பழமையான இதழ்களில் ஒன்று. தன் 86வது ஆண்டு நிறைவை முரசு எட்டிவிட்டது. தமிழ் முரசு நிறுவப்பட்ட காலம் முதல் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் முரசில் தனி இடம் எப்போதும் உண்டு.
"நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவின் போது விக்டோரியா அரங்கில் மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றை தமிழ் முரசு படைத்தது. அதில் கதாகாலட்சேபம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு ஆகியவற்றுடன் வீதி நாடகத்தையும் பல கலைக்குழுக்களுடன் இணைந்து தமிழ் முரசு மேடையேற்றியது. அதில் வீதி நாடத்தைப் படைத்தது அவாண்ட் தியேட்டார்தான். அதற்கு நல்லவரவேற்பும் கிடைத்தது.
"கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் எல்லையே இல்லை. சிங்கப்பூரர்களையும் வெளிநாட்டவரையும் இணைத்து குறிப்பாக பல இளையரை அறிமுகம் செய்துள்ளார் செல்வா. அவரது பணி தொடர வாழ்த்துகள். மக்கள் தொடர்ந்து உள்ளூர் நாடகத்துறைக்கும் கலைஞர்களுக்கும் ஆதரவு கொடுக்க வேண்டுகிறேன்," என்றார் திரு தமிழவேல்.

