கடந்த ஈராண்டுகளாகப் பெரும்பாலும் ஆளரவமின்றி முடங்கிக் கிடந்த பெஞ்சுரு கேளிக்கை நிலையம், நேற்று முன்தினம் பொங்கல் திருநாளன்று மாலையில் ஆரவாரத்துடன் புத்துயிர் பெற்றது.
அங்கு பொங்கல் கொண்டாட்டங்கள் இடம்பெற்றதே இதற்குக் காரணம்.
கியட் ஹோங் இளையர் குழு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் காற்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளுடன் ஆடல் பாடல் அங்கங்கள் இடம்பெற்றன.
திரும்பிய பக்கம் எல்லாம் நடவடிக்கைகள். என்றாலும், சமூக இடைவெளி காப்பதில் ஊழியர்கள் கவனமாய் இருந்தனர்.
1,600க்கும் மேற்பட்டோருக்கு முகக்கவசங்களும் கைச்சுத்திகரிப்பானும் அடங்கிய அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன.
பொங்கல் திருநாள், நன்றி உணர்வை கற்றுத்தரும் அருமையான திருநாள் என்றார் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான சுவா சூ காங் குழுத்தொகுதி எம்.பி. ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம்.
"சொந்த ஊரில் இருப்பதைப் போன்ற கொண்டாட்ட உணர்வை இங்கும் என்னால் உணர முடிந்ததை நினைத்து மகிழ்கிறேன்," என்றார் பாண்டிச்சேரியைச் சேர்ந்த திரு முருகதாஸ் பிரவீன், 23.
செய்தி: கி.ஜனார்த்தனன், படங்கள்: திமத்தி டேவிட்

