சக்தி மேகனா
உலகிற்கு உணவளிக்கும் உழவுத்தொழிலுக்கு உற்ற தோழனாய் விளங்கும் கால்நடைச் செல்வங்களைச் சிறப்பிக்கும் நன்னாளாம் மாட்டுப் பொங்கலான நேற்று லிட்டில் இந்தியாவில் தற்காலிகமாகக் குடியேறியிருந்த மாடுகளை ஏராளமானோர் கண்டு, உள்ளம் மகிழ்ந்தனர்.
'போலி அட் கிளைவ் ஸ்திரீட்டில்' உள்ள அந்தத் தற்காலிகப் பண்ணையில் இருக்கும் தங்களது மாடுகளுக்கு விக்னேஷ் மாட்டுப் பண்ணையினரும் அவர்தம் குடும்பத்தினரும் பட்டாடை அணிவித்து, மலர்மாலை சூட்டி, மஞ்சள் குங்குமம் இட்டு, சாம்பிராணி காட்டி வழிபட்டனர். பின்னர் மாடுகளுக்கு சர்க்கரைப் பொங்கல் படைக்கப்பட்டது.
எதிர்பார்த்ததைவிட அதிகமானோர் வந்து, மாடுகளைக் கண்டுசென்றதாகக் கூறிய லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் செயலாளர் திரு ருத்திராபதி, சமூகத்தின் ஆதரவு தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
குழந்தைகள் மாடுகளுடன் பேசி மகிழ்வதையும் இளையர்கள் பலர் வந்து செல்வதையும் காணும்போது இன்பமாக உள்ளது என்றார் 'ஜூனியர் குப்பண்ணா' உணவக உரிமையாளர் திரு பிரகாஷ்.
"எங்களுக்கு இது ஒரு புதிய அனுபவம். பொங்கல் திருநாளின்போது மக்களின் உணர்வுகளைப் பார்க்கும்போது எங்களுக்கு மெய்சிலிர்கிறது," என்றார் பிரிட்டனில் இருந்து தம் கணவருடன் வந்திருக்கும் சுற்றுப்பயணி திருவாட்டி கிளேர்.
இவ்வாண்டு பிற இனத்தவரும் தமிழ்க் கலாசாரத்தை அறிந்துகொண்டு, ஒன்றுகூடி மாட்டுப் பொங்கலைக் கொண்டாடினர்.

