தங்ளின் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் சமூக மன்ற மேலாண்மைக்குழுவும் இணைந்து பொங்கல் கொண்டாட்டத்தை நேரடி, மெய்நிகர் நிகழ்ச்சி களாக ஏற்பாடு செய்தன.
கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வாக 'பண்டிகைகளைக் கொண்டாடுவதால் பண்பாடு வளர்கிறதா? சேமிப்பு குறைகிறதா?' என்ற தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்றத்தின் நடுவராக திரு அ. முஹம்மது பிலால் பங்காற்ற, பண்பாடு வளர்கிறது என்ற அணியின் தலைவராக திருமதி காமாட்சி பாலமுருகன், அணியின் பேச்சாளர்களாக திரு முருகையன், திரு சுரேஷ் கெளஷிக் வாதிட்டனர்.
பண்டிகை காலங்களில்தான் பெரியோரை மதித்தலும், சிறியோர் மீது அன்புசெலுத்துதலும் என்ற பண்பு முதற்கொண்டு பல்வேறு சிறப்பான பண்புநலன்கள் புதுப்பிக்கப்படுகின்றன என பல்வேறு தகவல்களோடு விவாதத்தை எடுத்துவைத்தனர்.
பண்டிகைகள் கொண்டாடுவதால் பண்பாடு வளர்கிறதோ இல்லையோ சேமிப்பு தேய்கிறது என தங்கள் தரப்பு எதிர்வாதத்தையும் அக்கறையையும் திருமதி மஹ்ஜபீன் தலைமையிலான அணிப் பேச்சாளர்கள் குமாரி சேவாள், திரு புகழேந்தி ஆகியோர் எடுத்துரைத்தனர்.
தமிழர் பண்பாட்டில் நல்லொழுக்கம், ஈகை, தொண்டூழியம், உதவி, வீரம், அன்பு என பல்வேறு கூறுகள் உள்ளதையும், அவை பண்டிகைக் காலங்களில் எவ்வாறு வளர்கின்றன என்பதையும் அதோடு பண்டிகைகளால் அதிகப்படியான வீண்செலவுகள் ஏற்படுவதையும் இரு அணிகளின் வாத, எதிர்வாதங் களில் இருந்து எடுத்துக்கூறி, கொண்டாட்டங்களைச் சிக்கனமாகச் செய்து பண்பாட்டை வளர்க்க பண்டிகைகள் பெரிதும் உதவுகின்றன என கருத்தும் கலகலப்பும் கலந்த சிறப்பான தீர்ப்பை நடுவர் வழங்கினார்.
நேரடியாக அரங்கத்திலும் ஃபேஸ்புக் நேரலையிலும் ஏறக்குறைய 250 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

