தேசியப் பல்கலைக்கழகக் கலை நிலையத்தின் இந்திய நடனப் பிரிவு, அண்மையில் காலமான பிரபல நடன மேதை திருமதி சாந்தா பாஸ்கரின் இறுதிப் படைப்பான 'தன்மை' எனும் நடனத்தை அரங்கேற்றவிருக்கிறது.
2022ஆம் ஆண்டின் தேசியப் பல்கலைக்கழகக் கலை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, வரும் ஞாயிற்றுக்கிழமை மார்ச் 27ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு, பல்கலைக்கழகக் கலாசார நிலைய அரங்கில் இது இடம்பெறும்.
"ஆசிரியை திருமதி சாந்தா பாஸ்கர் அவர்கள் இதற்கான நடன அசைவுகளை முன்னரே வடிவமைத்துவிட்டார். தீவிர ஒத்திகைகள் மூலம் அவற்றை மெருகூட்டிக்கொண்டிருந்தார். அவரது இறுதி மூச்சு பிரியும் வரையிலும் எங்களை நிகழ்ச்சிக்குத் தயார்ப்படுத்துவதில் முனைப்புடன் இருந்தார்," என்று கூறினார் தேசியப் பல்கலைக்கழக இந்திய நடனப் பிரிவின் தலைவரான பி. அனு பிரியா.
"ஆசிரியர் என்பதற்கும் மேலாக அன்புக்குரிய மதியுரைஞராக, எங்கள் நடனப் பயணத்தில் ஒரு கலங்கரை விளக்கமாக இருந்த அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. திருமதி சாந்தா பாஸ்கருக்கு நாங்கள் செலுத்தும் நினைவஞ்சலியாக இந்நிகழ்ச்சி அமையும்," என்றார் அவர்.
சமகால பரதநாட்டிய நடனமான 'தன்மை', தேசியப் பல்கலைக்கழகக் கலைவிழாவுக்காக திருமதி சாந்தா உருவாக்கிய தனிப்பட்ட படைப்பு. தொட்டுணர முடியாத அம்சமான ஒளி பல்வேறு வகைகளில் எவ்வாறு நம் வாழ்க்கையில் பங்கு வகிக்கிறது என்பதை விளக்கும் நடனப் படைப்பு அது.
ஒளிக் கலைஞர் ஜோஷுவா யாங், மின்னிலக்க இசைத் தயாரிப்பாளர் மரியோ வனேகஸ், இசையமைப்பாளரும் கலைஞருமான டாக்டர் கானவிநோதன், அரங்க ஒளிவடிவமைப்பாளர் அல்பெர்ட்டோ விலியோ ஆகியோர் இணைந்து இந்த நிகழ்ச்சியைப் படைக்கவிருக்கின்றனர்.
தமது தனித்துவமான நடன அமைப்பிற்குப் புகழ்பெற்ற திருமதி சாந்தா பாஸ்கர், சிங்கப்பூரின் கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக 1990ல் அரசாங்கம் அவருக்கு கலாசாரப் பதக்கம் வழங்கி கௌரவித்தது. பொதுச்சேவை நட்சத்திர விருது, சிறப்புமிக்க சேவைக்கான பதக்கம் ஆகியவையும் அவருக்குப் புகழ்சேர்த்தன.

