சிங்கப்பூர் கல்வித்துறையின் முன்னோடியாக எண்ணிலடங்கா மாணவர்களை மேலுயர்த்திய மூத்த ஆசிரியர் திரு எஸ். டேனியல் கடந்த வியாழக்கிழமையன்று காலமானார்.
65 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த அவரின் தமிழ்ப் பணியும் ஆசிரியப்பணியும் அவரது 84வது வயதில் ஒரு நிறைவை நாடியது.
தமிழ் முரசு நாளிதழ், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், கல்வி அமைச்சின் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆகியவை ஏற்பாடு செய்திருந்த 2017ஆம் ஆண்டின் நல்லாசிரியர் விருது நிகழ்ச்சியில் வாழ்நாள் சாதனையாளராகக் கௌரவிக்கப்பட்டார் திரு டேனியல்.
செயிண்ட் ஜார்ஜஸ் தமிழ்ப்பள்ளியில் திரு டேனியலின் ஆசிரியப் பணி தொடங்கியது. சிங்கப்பூரின் கல்வித்துறை வரலாறு, அவரின் பங்களிப்புகளின்றி நிறைவடையாது.
'சிறுவர் தமிழ்' பாடநூல், பயிற்சிநூல்களை வகுத்த சிங்கப்பூர் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகத்தின் திட்ட இயக்குநராக திரு டேனியல் பொறுப்பு வகித்தார். இவை சிங்கப்பூரின் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதல் பாடத்திட்ட நூல்களாகும்.
சிங்கப்பூர் பாடத்திட்ட மேம்பாட்டுக் கழகத்தில் ஆசிரியர் டேனியலுடன் 1983ஆம் ஆண்டிலிருந்து 1988ஆம் ஆண்டு வரை நெருங்கிப் பணியாற்றிய திரு சாமிக்கண்ணு அவரைப்ப பற்றி நினைவுகூர்ந்தார்.
"சிறந்த ஆசிரியராகவும், இனிய நண்பராகவும், நல்ல மனிதராகவும் ஆசிரியர் டேனியல் இருந்தார். அவரோடு 80களில் பணிபுரிந்த அனுபவம் மறக்கமுடியாதது. சக ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாக இருந்த அவர், என்றுமே பணிவாக இருந்தார்.
"அவரின் பங்களிப்புகள் ஈடுசெய்ய முடியாதவை," என்றார் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் ஆலோசகரும் முன்னாள் தலைவருமான 73 வயது திரு சாமிக்கண்ணு.
தாம் மாணவராக இருந்த காலத்திலிருந்தே ஆசிரியராகத் தடம் பதித்துக்கொண்டிருந்த திரு டேனியலின் அதிர்வற்ற போக்குப் பலரைக் கவர்ந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.
கல்வி அமைச்சில் தமது பயணத்தைத் திரு டேனியல் தொடங்கி வைத்ததாக நினைவுகூர்ந்தார் தற்போது கல்வி அமைச்சின் சிங்கப்பூர் ஆசிரியர் கலைக்கழகத்தில் தலைமை முதன்மை ஆசிரியராகப் பணியாற்றும் 66 வயது திரு ஜெயராஜதாஸ் பாண்டியன்.
"இளம் வயதில் எனக்கு அனுபவம் குறைவாக இருந்ததைப் பொருட்படுத்தாமல், என்மீது நம்பிக்கை வைத்து, பல பொறுப்புகளை என்னிடம் கொடுத்தார். நான் தலைமையேற்ற குழுக்களில்கூட உறுப்பினராகச் செயலாற்றி ஆலோசனைகூறும் அளவுக்கு அவர் பெரிய மனது கொண்டவர். தமிழாசிரியர்களில் ஒரு சாணக்கியராக அவரைக் குறிப்பிடுவதே தகும்," என்றார் திரு ஜெயராஜதாஸ் பாண்டியன்.
தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்த ஆசிரியர் திரு டேனியல், 1982ஆம் ஆண்டில் எழுத்துச் சீரமைப்பு குறித்தப் போராட்டம் நடந்துகொண்டிருக்கையில், சிறுவர் தமிழ் புத்தகத்தை சீர்திருத்த எழுத்துக்களுடன் வெளியிடப் பரிந்துரைத்தார்.
இக்கட்டான சூழலில் சரியான நேரத்தில் அவர் எடுத்த முடிவினால்தான் சிறுவர் தமிழ் புத்தகம் பலகாலம் பயன்பாட்டில் இருந்தது என திரு ஜெயராஜதாஸ் பாண்டியன் குறிப்பிட்டார்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன் பணி ஓய்வு பெற்ற பின்னரும், திரு டேனியலின் தமிழ்ப்பணி தொடர்ந்து ஓயவில்லை. மாணவர்களுக்காகத் தம்மை அர்ப்பணித்த அவர், தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் மூத்த தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார்.
தொடக்கப்பள்ளி முதல் தொடக்கக் கல்லூரி வரை பல்வேறு மாணவர்களின் பயணங்களில் வழிகாட்டியாக இருந்துள்ளார் திரு டேனியல். அவர் ஆசிரியராகக் கடைசியாக தேசிய தொடக்கக் கல்லூரியில் பணியாற்றினார்.
"2007ஆம் ஆண்டில் கட்டொழுங்கு ஆசிரியராகப் பணிபுரிந்த என்னிடம், கோபப்படுவதைத் தவிர்க்கவேண்டும் என்றும், மாணவர்களிடம் ஆசிரியர்கள் பெற்றோரைப்போல் நடந்துகொள்ளவேண்டும் என்றும் பொறுமையாக எடுத்துரைத்தார். கண்ணியமான மனிதரும், பண்பாளருமான திரு டேனியல் எனது சிந்தனைகளை மாற்றியமைத்துள்ளார்," என்றார் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவரான 50 வயது திரு தனபால் குமார்.
இன்று மதியம் ஒரு மணிவரை வீடு எண் 08-367, வீவக புளோக் 414, சிராங்கூன் சென்ட்ரலில் ஆசிரியர் டேனியலுக்கு அஞ்சலி செலுத்தலாம்.
விவரங்களுக்கு www.sgvigil.com/AS2364 எனும் இணையத்தளத்தை நாடலாம்.
ஆ. விஷ்ணு வர்தினி

