பெண்களின் வாழ்க்கைப் பயணங்களையும் சாதனைகளையும் கொண்டாடும் வகையில் கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது 'பிரிஸ்மேடிக் விமன்' எனும் நிகழ்ச்சி. லிஷா எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் பெண்கள் பிரிவும் சிண்டா எனும் சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கமும் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
"பெண்கள் சக பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் நிகழ்வுகள் சமூகத்தில் முக்கியமானதாகும். வேலை வாழ்க்கை சமநிலையைப் பற்றிய கலந்துரையாடல் அந்த வகையில் பெண்களுக்குத் துணை நிற்கும். 'பாரபட்சத்தை உடையுங்கள்' என்ற இவ்வாண்டின் மகளிர் தின வாசகத்துக்கேற்ப லிஷாவின் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது," என்றார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் அலுவலக அமைச்சர், இரண்டாம் நிதி அமைச்சர் இரண்டாம் தேசிய வளர்ச்சி அமைச்சர் ஆகிய பொறுப்புகளை வகிக்கும் குமாரி இந்திராணி ராஜா.
இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு அங்கமான குழுக் கலந்துரையாடலில், சமூக சேவையாளர்கள், தொழில் முனைவர்கள், ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள் என நான்கு பெண்கள் பங்கேற்றனர். நால்வரும் பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றிய தங்களின் கருத்துகளையும் தனிப்பட்ட அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
பெண்கள் மாறுபட்ட பின்னணிகளையும் திறன்களையும் கொண்டுள்ளனர் என்றும் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கியபோதும் சிதறாத அவர்களின் உறுதியை நாம் அங்கீகரிக்கவேண்டும் என்றும் கூறினார் லிஷா பெண்கள் பிரிவின் தலைவர் திருமதி ஜாய்ஸ் கிங்க்ஸ்லீ.
இந்நிகழ்ச்சியில் லிஷா பெண்கள் பிரிவின் 'டோயென்' நூலின் இரண்டாவது பதிப்பின் வெளியீடும் இடம்பெற்றது. இந்நூல் 50 சிங்கப்பூர் இந்தியப் பெண்களின் பயணங்களைக் கொண்டாடுகிறது.
'டோயென்' நூலின் முதல் பதிப்பு 2017ஆம் ஆண்டில் லிஷா பெண்களின் 100ஆவது ஆண்டு நிகழ்ச்சியில் வெளியானது.
சென்ற வாரம் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அங்கங்களாக இடம்பெற்ற ஒப்பனைப் பயிலரங்கு உள்ளிட்டவையும் பங்கேற்பாளர்களை மகிழ்வித்தன. லிஷா பெண்கள் பிரிவு இவ்வாண்டு தனது பத்தாண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. இந்நிகழ்வு அதன் ஏற்பாட்டில் நடைபெற்ற 200வது நிகழ்ச்சியாகும்.
செய்தி: ஆ. விஷ்ணு வர்தினி

