இலங்கையில் உயர்நிலைப்பள்ளி வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது தேசிய தேர்வு எழுதுவதற்கு மூன்று நாள்களுக்கு முன்னர் திரு மோசஸ் அன்டன் சூசைதாசனின் வீடு அப்போது நடந்த இனக்கலவரத்தில் எரிக்கப்பட்டது. பாடப் புத்தகங்கள், சீருடை ஆகிய பொருள்களை இழந்து அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்த நேரத்தில் அந்தத் தேர்வை இவர் எழுதவேண்டியிருந்தது.
இலங்கையில் நிகழ்ந்த இனப்பூசல், உள்நாட்டுப் போர் ஆகியவற்றால் திரு தாசனின் மனதில் ஏற்பட்ட ஆழமான வடுக்கள் இன நல்லிணக்கம் நிறைந்த சிங்கப்பூரில் ஆறின. இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் பூசலை செரிவான விவரங்களுடன் எளிய மொழிநடையில் 'இது கதையல்ல' என்ற நாவலாகத் தமது உருக்கமான வாழ்க்கை அனுபவங்களின் பின்னணியில் இவர் எழுதியுள்ளார்.
இம்மாதம் 19ஆம் தேதியன்று அப்பர் புக்கிட் தீமா ரோட்டிலுள்ள 'செல்வேஷன் ஆர்மி'யில் நடைபெற்ற இந்நூலின் வெளியீட்டு விழாவில் வர்த்தக மூத்த துணை அமைச்சர் சீ ஹோங் டாட் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இலங்கையின் மேற்குக் கடற்கரைக்கு அருகிலுள்ள புத்தளம் என்ற நகரில் 1968ஆம் ஆண்டு பிறந்த திரு தாசன், ஆசிரியராக இருந்த தமது தந்தை, தாயார், மூன்று சகோதரர்கள் ஆகியோருடன் வளர்ந்தார். ஆரம்பத்தில் அங்கிருந்த அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை, இனக்கலவரத்தால் எப்படி கலைந்தது என்பதை விவரித்து எழுதியுள்ளார். குறிப்பாக ஐந்து முறை அவர் நூலிழையில் தப்பிய சம்பவங்கள் குறித்த தகவல்களும் இந்நாவலில் இடம்பெற்றுள்ளன.
பிரிட்டனில் இளநிலை, முதுநிலைப் பட்டக்கல்வி பயின்ற இவர், அங்கேயே தங்கத் திட்டமிட்டபோதும் சிங்கப்பூரின் பாதுகாப்பும் இங்கு தமிழுக்குத் தரப்படும் முக்கியத்துவமும் பிடித்துப்போய் இங்கே வாழ முடிவுசெய்ததாகக் கூறினார். பிரிட்டனில் இனப் பாகுபாடு அடிப்படையில் தொல்லைகளைச் சந்தித்த திரு தாசன், சிங்கப்பூரின் சகிப்புத்தன்மைமிக்க சூழலால் நிம்மதி பெருமூச்சு விட்டதாகக் குறிப்பிட்டார்.
கட்டுமானத் துறையில் பொறியாளராகத் தொடங்கி 25 ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்துவரும் இவர், தோ பாயோவில் மனைவியுடனும் ஆனந்த், யாழினி ஆகிய தமது பிள்ளைகளுடனும் வசிக்கிறார்.
2020ஆம் ஆண்டு இலங்கையில் சுற்றுலா சென்றபோது திரு தாசனின் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மூன்று மாதங்கள் மருத்துவ விடுப்பில் இருந்தபோது தமது நண்பர் புத்தகம் எழுதப் பரிந்துரைத்ததாக இவர் கூறினார்.
கொவிட்-19 சூழலால் தமது நூலைச் சென்ற ஆண்டு வெளியிட முடியாமல் போக, திரு சீ ஹோங் டாட்டின் ஊக்குவிப்பால் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
வேலையாலும் தாம் ஈடுபட்ட சமூகப் பணிகளாலும் ஏற்பட்ட நேரப் பற்றாக்குறையால் அதிகம் வாசிக்க முடியவில்லை என்று திரு தாசன் வருத்தத்துடன் குறிப்பிட்டார். அதனால் தமது சொந்த நடையில் மிக எளிமையாக எழுதவேண்டியிருந்ததாகக் கூறினார்.
"எந்த ஓர் எழுத்தாளரின் பாணியையும் தழுவாமல் நான் எனது பாணியில் எழுதினேன்.. இலங்கைத் தமிழ், இந்தியத் தமிழ், சிங்கப்பூர்த் தமிழ் ஆகியவற்றைக் கலந்த ஒரு தனி பாணி எனது எழுத்தில் தென்பட்டது," என்று திரு தாசன் கூறினார். வரலாற்றுச் சம்பவங்களைச் சொந்த நினைவுகளுடன் மட்டுமல்லாமல் அதனை ஆய்வுகளின் மூலம் சரிபார்க்க வேண்டியிருந்ததாகத் தெரிவித்தார்.
திரு தாசனின் கதை கூறும் பாங்கு பாராட்டுக்குரியது என்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பாளர் ஆ. பழனியப்பன் தமிழ் முரசிடம் கூறினார். திரு தாசனின் புத்தகம் சிங்கப்பூரின் நல்லிணக்கத்திற்கான நன்றியுணர்வைப் புகட்டுவதாக மவுண்ட்பேட்டன் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் பியோவ் சுவான் தெரிவித்தார்.
கி. ஜனார்த்தனன்

