மாதங்கி இளங்கோவன்
ஓம்கார் ஆர்ட்ஸ் நிறுவனமும் பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவும் இணைந்து 'கவியும் நாட்டியமும்' என்ற பரதநாட்டியப் போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
சென்ற சனிக்கிழமை நடந்த போட்டியில் பங்கெடுத்தவர்கள் தமிழ்ப் பாடல்களுக்கு நடனமாடியதோடு ஒரு நிமிடத்திற்கு தாங்கள் தேர்ந்தெடுத்த கவிதை நயம் மிக்க பாடலைப் பற்றி விவரித்துப் பேச வேண்டியிருந்தது. கலையின் வாயிலாக தமிழ்ப் புழக்கத்தை மேம்படுத்துவது இதன் இலக்கு.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகையளித்த கலாசார, சமூக, இளையர் துறைத் துணை அமைச்சர் ஆல்வின் டான் போட்டியாளர்களுக்குப் பரிசளித்துப் பாராட்டினார்.
பரதநாட்டிய போட்டிகளை ஈராண்டுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யும் ஓம்கார் ஆர்ட்ஸ், இவ்வாண்டு மீண்டும் நேரடி நிகழ்ச்சியாக அதனை நடத்துவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தது.
"மேடையில் ஆடி மக்களின் கைத்தட்டலைக் கேட்கும்போது கிடைக்கும் பெருமித உணர்வு நடன கலைஞர்களுக்குத்தான் புரியும். அது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஓர் உணர்ச்சி," என்றார் ஓம்கார் ஆர்ட்ஸின் உரிமையாளரான ஸ்ரீதேவி.
போட்டியின் நடுவர்களாக உள்ளூர்ப் பிரபலங்கள் விக்னேஸ்வரி வடிவழகனும் செல்வாவும் செயல்பட்டனர். மூன்று பிரிவுகளில் போட்டி இடம்பெற்றது.
தனிப் பிரிவில் 13 வயது முதல் 18 வயது வரையிலான இளையர்கள் ஒரு பிரிவாகவும் மற்றொன்றில் 19 முதல் 26 வயது வரையிலான பெரியவர்களும் கலந்துகொண்டனர். குழுப் பிரிவின் கீழ் ஏழு குழுக்கள் பங்கேற்றன.
பரதநாட்டியத்திற்கும் கவிதைக்கும் இடையே இருக்கும் உறவு மிகவும் நெருக்கமானது என்பதால் அதனையே இவ்வாண்டின் போட்டிக்குக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்ததாகக் கூறியது ஓம்கார் ஆர்ட்ஸ்.
பரதநாட்டிய நடனமணிகள் தெலுங்கு, சமஸ்கிருதம், தமிழ் எனப் பல இந்திய மொழிகளின் பாடல்களுக்கு ஆடினாலும் அவரவர் தாய்மொழியில் அமைந்த பாடல் வரிகளுக்கு நடமிடும்போதும் முகபாவனையை வெளிக்காட்டும்போதும் மட்டற்ற மகிழ்ச்சியடைவர் என்றனர் ஏற்பாட்டாளர்கள்.
பாரதியார் உள்ளிட்ட புகழ்பெற்ற புலவர்களின் பாடல்களுக்கு வெவ்வேறு நடனப் பள்ளிகளிலிருந்து வந்த நடனமணிகள் நடனமாடினர். 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' போன்ற தமிழ்த் திரைப்படப் பாடல்களுக்கும் சிலர் அழகாக நடனமாடினர்.
குழுப் பிரிவில் வெற்றிபெற்ற 'தர்ஷன் ஃபைன் ஆர்ட்ஸின்' அஸ்வினி கணேசன் இப்போட்டியில் கலந்துகொண்டதால் தனது சக நடனமணிகளோடு உறவு வலுப்பெற்றதாகக் கூறினார். பள்ளி, வேலை என பல விஷயங்களை சமாளிக்க வேண்டும் என்றாலும் ஒவ்வொரு வாரமும் ஒன்றுசேர்ந்து இப்போட்டிக்கு நேரம் ஒதுக்கி நடனப் பயிற்சிகளை மேற்கொண்டது தங்களுடைய குழு உணர்ச்சியை வளர்த்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். மற்ற குழுக்களின் நடனமணிகள் அரங்கேற்றிய அழகான படைப்புகளைக் காணவும் தங்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்தது என்றார் அஸ்வினி.
பெரியோர் பிரிவில் 24 வயது சுவேதா ஜெயபால் வெற்றிவாகை சூடினார். "ஈராண்டுகளுக்குப் பின்னர் மக்களுக்கு முன் மேடையில் ஆடுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்துள்ளது. சுவையான கருப்பொருளோடு தமிழ்ப் புழக்கத்தை ஊக்குவிக்கும் விதத்திலும் நடைபெற்ற போட்டியின் ஏற்பாட்டாளர்களுக்கும் நடன ஆசிரியை ஸ்வர்ண வர்ஷா குருமூர்த்தி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்," என்றார் அவர்.
மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி மாணவர்கள் கிளிகளைப் போல பச்சை நிற ஆடையணிந்து கிளி கௌத்துவம் என்ற புதுமையான நடனப் படைப்பை மேடையேற்றினர். ஸ்ரீதேவியின் மாணவர்கள் மண்பானைகளின்மேல் கண்ணுக்கு விருந்தளிக்கும் நடனத்தைப் படைத்தனர்.

